ஜூன் 24 – கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்…

    ஜூன் 24 – கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்… ( ஜூன் 23, 2019-ல் எழுதியது)

கவியரசன், கவிப்பேரரசன், எல்லாமே என்றும் கண்ணதாசன்தான். இவர் எழுதிய பழைய திரைப்பட பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்தான், அந்த திரையுலகப் பொன்னாட்களை நினைக்கும்போதெல்லாம், “வசந்தக் காலம் வருமோ” என்னும் கவிஞர் சுரதாவின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

வண்ணவண்ண சொற்குவியல்
….வகைவகையாய்ப் பாடல்கள்
எண்ணியென்றும் உள்மகிழும்
….இன்பவெழில் சித்திரங்கள்
பண்ணிசைந்த பாப்பூக்கள்
….பார்முழுதும் பவனிவரும்
கண்ணதாசா உன்பெயரை
….காலமெலாம் சொல்லிநிற்கும்

புண்ணியமாய் பாரதத்தாய்ப்
….புதல்வனாகப் பெற்றெடுத்த,
கண்ணியனே கண்ணதாசா
….கருத்தினிலே நின்றநேசா
மண்ணுலகில் வளர்தமிழில்
….மாரியெனப் பொழிந்தவனே
விண்ணுலகும் வியக்கவங்கு
….வியன்கவிகள் செய்கிறாயோ?

நினைவினிலே நித்தியமாய்
….நின்றுளத்தில் நெகிழவைக்கும்,
அனவைரையும் அன்றாடம்
….ஆனந்தக் கடலாழ்த்தும்,
தினையளவுக் கருத்தினையும்
….திறமையாயுன் சொல்லழகில்
பனையளவு உயர்த்திவிடும்,
….பாங்குண்டே உன்றமிழில்

அருத்தமுள்ள இந்துமத
….ஆழமான அனுபவங்கள்
கருத்தொடுநீ சிந்தித்து
….கச்சிதமாய் எழுதிவைத்தாய்!
விருப்போடு படித்தறிந்து
….வியந்தவர்கள் எத்துணப்பேர்!
குருவாக உளக்குன்றின்
….கொடுமுடியில் தங்கிவிட்டாய்!

நறும்பாகோ நாவொடுதான்!
…. நறுமணமோ நாசியொடாம்!
பெறுகின்ற செவியமுதும்
….பேறான கண்ணொளியும்
அறுகின்ற பிறவியிதில்
….அணுத்துளியே ஆயினுன்றன்
சிறுகவியும் ஜெயித்திருக்கும்
…. செகயிறுதி நாள்வரையில்!

கண்ணதாச! கல்வியினால்
….கனிந்ததல்ல உன்பாட்டு
எண்ணத்தின் எழுச்சியிலே
….ஏற்றிவைத்த எழிற்சுடராம்!
புண்ணியமாய் இவ்வுயிரில்
….புகுந்துன்றன் புலமையின்பம்
உண்ணுகின்ற உவப்பளித்தாய்
….உள்ளளவும் உனைநினைப்பேன்!

Advertisements
Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

நெஞ்சு பொறுக்குதில்லையே – 1

நேற்று சாரதா பதிப்பக வெளியீடான என்ற கல்கியின் சிறுகதை, குறுநாடகமென்று கலந்தாங்கட்டியாகத் தொகுக்கப்பட்டு, “பாங்கர் விநாயகர்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகத்தில் விடுதலை இயக்க காலத்தில் திருச்செங்கோடு காந்தியாஸ்ரமத்தில் கல்கி தங்கி, அவர்களுடைய மதுவிலக்கு பிரசாரப் பத்திரிக்கைக்காக எழுதியவைத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதற்காக எழுதப்பட்ட ஒரு நீண்ட முன்னுரையே மிகவும் சுவாரசியமானது.. இராஜாஜி போன்ற மாமனிதர்களை நாம் எவ்வளவு எளிதாக மறந்துபோனோம் என்பதை நினைவுறுத்தி… உள்ளத்தையும்தான்… நம்மை வெட்கப்பட வைக்கிறது.. பல அரிய விஷயங்களை எளிதாகச் சொல்லும் இக்கதைகளும் நாடகங்களும் எத்தனை உத்தமர்கள் வாழ்ந்த நாடு நம்நாடு என்பதையும் நமக்குச் சொல்லுகின்றன. கூடவே அயோக்கியர்களும், களவாணிகளும் நம்மவரிலேயே எத்தனைப்பேர் இருந்திருக்கின்றனர் என்பதையும் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது..

இதில் ஒரு மாதப்பத்திரிக்கையில் இராஜாஜியின் மேல் குற்றஞ்சாட்டி ஒரு செய்தி வந்ததாம்.. அதாவது.. “இராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்ந்த பணத்தைக் கொண்டுபோய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்துவிட்டு வந்தார்”.. என்பதுதான் அந்த செய்தி… அந்த செய்தி இராஜாஜியின் கவனதுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அந்த பத்திரிக்கையின்மேல் வழக்குத் தொடரப்போவதாகச் சொன்னாராம்.  செய்தியைக் கொண்டுவந்தவர் திடுக்கிட்டு, “ மிக அழகாய் இருக்கிறது… அந்த பத்திரிக்கையை எத்தனைப் பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்தாலுமே யார் நம்பப் போகிறார்கள்? அந்த பத்திரிக்கையின் மேல் கேஸ்போட்டால், தானாக மூடப்போகும் பத்திரிக்கைக்கு அநாவசியமாக விளம்பரமல்லவா கிடைத்துவிடும் என்றாராம்.

இது என்ன அக்கப்போராக இருக்கிறதே என்கிறீர்களா.. அதற்கு இராஜாஜி சொன்ன பதிலையும் படித்துவிடுங்கள்..

“ அப்படி அந்த பத்திரிக்கைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டு போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவோ, யாராவது அவதூறை நம்பப்போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை..  பத்திரிக்கை நடத்துபவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப்போவதில்லை.. ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால், பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்” என்றார்..”

அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, அதில் இராஜிக்கே சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது.. ஏனெனில் இராஜாஜி அதுவரை கொடைக்கானலுக்கேப் போனதில்லையாம்!

இப்போது ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன. ஒருவிதத்தில் மக்களுக்குச் செய்திகளும், பலதரப்பட்ட வர்களின் பார்வைகளும் தெரிய வருகிறது என்றாலும்.. எதையுமே சரிபார்த்து உறுதி செய்ய யாருக்குமே நேரமில்லை, தைரியமில்லை. ஆக மொத்தம் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மெல்ல மெல்ல நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடக்கிறது..

ஒருபுறம் கட்சிகளை சார்ந்த ஊடகங்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி) மூளைச் சலவை செய்வதையே முழுநேரத் தொழிலாகவும், மக்களைத் தொடர்ச்சியாக பயமுறுத்துவதையே ஏற்றுக்கொண்ட கொள்கையாகவும் செயல் படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகி, ஆபாசக் களஞ்சியங்களாகவே ஆகிவிட்டன. ட்விட்டர், வாட்ஸாப், ஃபேஸ்புக், யூட்யூப் இன்னும் இத்தியாதி இத்யாதி இணையதள செயலிகளெல்லாம் இணையே இல்லாத சமூக எதிர்மறை வினைக்களங்களாகவும், பெருகி வரும் விதம்விதமான குற்றங்களுக்குக் காரணிகளாகவும் மாறிவிட்டன.. இன்னும் புதுப்புது விதங்களில் நம்பிக்கையின்மை, சமய, இன, நிலைப்பாடுகளையொட்டி வெறுப்பை விதைத்து இழிவை வளர்க்கின்றன. அழிவைத்தான் அறுவடைச் செய்யப்போகிறோம்…

#metoo இயக்கத்தினால் நன்மை விளைந்து காமக்கசடுகள் கழியுமென்று பார்த்தால், எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே தெரியாவண்ணம்… என்னென்னவோ முளைக்கின்றன. வெட்ட வெட்ட முளைக்கும் அசுரத்தலைக்கள்போல்.. 

ஆள்பவர்களின் சிந்தனைகளைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.. தேர்தலில் உரக்கப் பேசுபவர்களும், பதவிக்கு வந்த பிறகு ஆழ்நிலைத் தியானமும் மௌனமும் பழகுகிறார்கள்.. ஆரவாரப் பேய்களாக மற்றவர்கள் கூவுகிறார்கள்..

எவர்களைக் குற்றஞ் சாட்டி ஆட்சியைப் பிடித்தார்களோ, அவர்களில் ஒருவரையும் நீதியால் தண்டிக்கமுடியவில்லை.. எல்லோருமே உழல் வலைப் பின்னலில் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்களோ என்னவோ? ஒருவர் முதுகள் இன்னொருவர் குத்தரிவாளை வைத்து, அணைத்துக்கொள்ளும் கயவர்களாக இருக்கிறார்கள்.. 

மதவியாபாரிகள், மதவிபச்சாரிகள், என்று அரசியல், சமயம், பொதுவாழ்க்கை எல்லாவற்றிலும் விரவி, அடிமுதல் நுனிவரை கயமை, கபடு, ஆசாரமின்மை, நெறி பிறழ்தல், நீதியின்மை, அரசியல் பிழைத்தல் என்று கிருமியாக வியாபித்து, விஷமாக சமூகங்கள் மெல்ல ஆனால் உறுதியாக மரித்துக்கொண்டிருக்கின்றன.

“ஸம்பவாமி யுகே யுகே” என்று சொன்ன கண்ணனோ, எங்கிருந்தோ புன்னகைத்துக் கொண்டிருக்கிறான்.

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் -606

15thDec 2013

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
                            (குறள் 599: ஊக்கமுடைமை அதிகாரம்)

பரியது– உருவத்தால் பெரியது, வலிமிக்கதும்
கூர்ங்கோட்டது– கூரிய கொம்புகளை (தந்தங்களை) கொண்டது யானை
ஆயினும்யானை– இருப்பினும் (ஊக்கமில்லாமையால்)
வெருஉம்– அஞ்சும்
புலி– புலியினால்
தாக்குறின்– தாக்கப்படுமாயின்.

யானைக்கு தன் வலிமை தெரியாது என்பார்கள். யானை, புலியைப் போலல்லாமல், ஒரு மரக்கறி மிருகம்; தன் உணவுக்காக பிற மிருகங்களைக் கொல்வதில்லை. அதைக்கொண்டு அதற்கு தன் வலிமை தெரியாது என்றும், ஊக்கமில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்கு புலியை விட பெரிய உடம்பும், வலிமையும், குத்திக் கிழிக்கும் கூரிய தந்தங்களும் இருந்தாலும், உள்ளத்து ஊக்கமின்மையினால், புலியைக் கண்டு அது அஞ்சும் என்கிறது இக்குறள். இக்குறள் உண்மையைத்தான் சொல்லுகிறது என்றாலும், பிறவியால் பிறவுயிர்கொன்று புசிக்கும் புலிக்கு ஊக்கமுள்ளதாயும், அவ்வாறு செய்யாத யானைக்கு ஊக்கமில்லாததாயும் சொல்வது, ஊக்கமுடைமையை வலியுறுத்த தவறான ஒப்புமையைச் சொன்னதாகும்.

அரசியல் களங்களில் கொள்ளையடித்தும், கொலை செய்தும் பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏதோ ஊக்கம் இருப்பது போலவும், அது இல்லாத குடிமக்களுக்கு அது இல்லாதது போலவும் ஆகிவிடும். எடுத்துக்காட்டுகளிலே கூட தவறான ஒப்புமைகளைச் சொல்லக்கூடாது. அவ்விதத்திலே இக்குறள் பொருந்தாவொன்றே!

குறள் கருத்தை ஒட்டியே ஒரு குறளும், அதன் உள்ளுரைப் பொருளில் உடன்படாமையின், மற்றொரு குறளும் எழுதப்பட்டது. குறள் கருத்து ஊக்கமின்மைக்கும் உருவுக்கும் தொடர்பில்லை என்பதையும், உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை அடிக்கருத்தாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Translitertation:

pariyadu kUrngkOTTadu Ayinum yAnai
verUum pulithAk kuRin.

pariyadu– Bigger in size and in strength
kUrngkOTTadu– Shapr tusks
Ayinum yAnai– Even if it has such superiority, an elephant
verUum– will fear
puli– by tiger
thAkkuRin– if attacked

It is generally said that an elephant does know its strength. Unlike a tiger, elephant is a vegetarian animal. It does not kill other animals for its food; and because of that it is said that it does not have zeal or effort on its own or does not know its strength.

This verse says, though an elephant has a bigger physique, strength, and sharper tusks to kill anybody, still it will fear a tiger and the implied meaning is because of its lack of zeal.

Though it remains the truth, the comparison is wrongly placed. A tiger is an animal that kills for its food and an elephant does not. To stress a thought, a wrong comparison must never be employed, which is what has been done in this verse. It is impossible to accept vaLLuvar’s comparison.

In political stage, people that swindle or kill for their political gains are not to be construed people have great zeal and commoners, may be big in strength and size are inferior because they don’t act against such politicians.

Two alternate verses, one to reflect the thought as it is and another one to say in more general terms have been written today.

“Physical stature and sharp implements are of no use without zeal
 As they can fail before people of small frame but resolute like steal”

இன்றெனது குறள்(கள்):
பெருவுருவும் கூர்கொம்பும் பெற்றாலும் ஆனை
ஒருபுலி தாக்கவஞ் சும்

peruvuruvum kUrkombum peRRalum Anai
orupuli thAkkavan chum

வலியுரு பெற்றாலும் ஊக்கமிலார் உள்ளார்
எலியெனினும் அஞ்சிசா கும்

valiyuru peRRalum UkkamilAr uLLAr
eliyeninum anjisA gum

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஜயேந்திர இசைமஞ்சரி

அண்மையில் சித்தியடைந்த ஆசார்யர் பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி அவர்களைப் பற்றிய பாடல்கள் எழுதச் சொல்லி, நான் சார்ந்திருக்கும், சந்தவசந்தக் குழுவில் மூத்தவரான புலவர் இராமமூர்த்தி என்னைப் பணித்திருந்தார். ஆச்சார்யரைப் பற்றி எவ்வளவோ பாடலாம். என்னால் இயன்ற அளவில் ஒரு 18 கீர்த்தனைகளை எழுதி இங்கே பதிக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் இவற்றின் இசை வடிவங்களைப் பாடி “ஸவுண்ட் க்ளவுட்” (ஒலி மேகம்) என்னும் வலைத் தளத்தில் இடும் எண்ணமும் இருக்கிறது. பின்னர் ஒரு குறைந்த அளவு சுரக்குறிப்புகளையாவது இவற்றுக்குச் செய்யவும் எண்ணமிருக்கிறது.. நேரம்தான் கிடைக்கவேண்டும்.. பாடுபவர்களுக்கு எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்.. இக்கீர்தனைகளின் வடிவ அமைப்பிலோ, கருத்தமைப்பிலோ, ஏதேனும் குற்றங்குறைகள் இருப்பின், படிப்பவர்கள் தயவு செய்து சுட்டவும்.. அவற்றைத் திருத்தி வெளியிட ஏதுவாகும்.. இவற்றைப் படித்த/பாடிக்கேட்ட சில அன்பர்கள், முத்திரை எங்கே என்றும் கேட்டார்கள்.. முத்திரைப் பதித்தவர்களே முத்திரைகள் இல்லாமல் பாடல் செய்திருக்கிறார்கள்.. நான் எம்மாத்திரம்? தவிரவும், ஆச்சார்யர்களைப் பற்றிப் பாடும் பாடல்களில், அவர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும்! வலிந்து என்னுடைய முத்திரையென்று, பொருந்தாத வகையில் எதையும் திணிக்க மனம் செல்லவில்லை.

அன்புடன்
அஷோக் சுப்ரமணியன்..

பூஜ்யஸ்ரீ காமகோடி ஸர்வக்ஞ பீடாதிபதி ஜயேந்திர இசை மஞ்சரி

(1)
துண்டீர ராஜ துதிக்கையனின் தாமரைத்
தண்தாள் பணிந்து ஜயேந்திர கீதமாலை
பண்ணார்ந் துனக்கே படைத்தோம் பரமாநீ
கண்பார்த் தருளே கனிந்து

நாட்டை: ஆதி (3/4 இடம்)

பல்லவி:
அத்வைத நெறிகாக்கும் அருட்புனலே
ஆதிஶங்கரப் பொறியாய் அவதரித்தக் கனலே!

அனுபல்லவி:
சித்கனரூப ஜயேந்திர ஸரஸ்வதீ!
வித்தக வேதசாஸ்த்ராகம வாக்பதீ!

சரணம்:
நித்திய பூஜா நியமத்தில் நின்றாய்!
சத்குரு சந்திரசேகரர் வழிசென்றாய்
சித்தத் திலென்றும் சேவையில் நின்றாய்!
உத்தம முத்தனே ஒளிர்ஞானக் குன்றாய்!

(2)
கரஹரப்ரியா: ஆதி (1/2 இடம்)

பல்லவி:
ஜயஜய ஜயேந்திர ஸரஸ்வதி
ஜகத்குரு பாதாரவிந்தமே கதி!

அனுபல்லவி:
பவபயம் போக்கிடும் பரமகருணாநிதி
அவமதி நீங்கிட அவரன்றோ ததி?

சரணம்:
கரசரணங்கள் காருண்ய வாரிதி
கண்கள்கனிவிலே காண்பது குளிர்மதி
வரமென வாக்கமுதம் வற்றா ஜீவநதி
தண்ணருள் பெறவே சத்குருவைத் துதி
(3)
ஶங்கராபரணம் (மிஶ்ர சாபு)

பல்லவி:
ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி –
ஸனாதன ஸாரதி – யதி

அனுபல்லவி:
காமகோடி பீடம் அமர்ந்து
காஞ்சிமுனி தவசீலம் தொடர்ந்த

சரணம்:
காருண்யஸ்ரீ வரத ராஜனும்
கச்சிவளர் ஏகம்ப நாதனும்
சீருடன்திரு மகளும் வாணியும்
சேர்ந்தருள் காமாக்ஷி கழல்பணி

(4)
வாசஸ்பதி (ரூபகம்)

பல்லவி:
ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதீ
திருவருள்புரி தயாநிதி!

அனுபல்லவி:
தீனருக்கருள் சீலமே
சின்மயானந்த கோலமே -ஜெய (ஸ்ரீ)

சரணம் 1:
வேதசாஸ்த்ர ஞானமாகி
வியந்திடும் ப்ரபாவமாகி
நீதமோதத் துறவியாகி
நிறைசிறந்த அறமுமான (ஸ்ரீ)

சரணம் 2:
ஸத்வகுணம் ஶாந்தரூபம்
ஸந்ததமும் மந்தஹாஸம்
சிந்தையில் ஸஹாயபாவம்
சீதநதி வாக்ப்ரவாஹம்! (ஸ்ரீ)
(5)
பேகடா (கண்டசாபு)

பல்லவி:
இருள்நீக்கி தலமுதித்த ஈசஸ்ரீ ஜயேந்திரா
மருள்நீக்கி மாஞானம் மகிழ்ந்தருளும் சங்கரா! (இருள் நீக்கி)

அனுபல்லவி:
இருஞ்சிறையாம் இகவாழ்வில் எமைநாளும் உழலாது
வருமுன்னர் காக்கின்ற வரம்தந்த வள்ளலாய் (இருள் நீக்கி)

சரணம்:
கருணைவிழி கனிந்தருளி கரைந்துருகச் செய்கிறாய்!
பெருமைசெய்து பேதையின் பிறப்புக்கொரு பொருள்செய்தாய்!
தருநிழலில் அமர்ந்தருளும் தக்ஷிணா மூர்த்திப்போல்
குருவேநீ திருசெய்தெம் குலம்வாழும் வகைசெய்தாய் (இருள் நீக்கி)

(6)
தன்யாசி (ஆதி ½ இடம்)

பல்லவி:
கண்டேன் குருமணியைக் காஞ்சியிலே – நான்
கண்பெற்ற பயனென்றே கண்டுகொண்டேன் (கண்டேன்)

அனுபல்லவி:
தண்டம் ஏந்திய கையும் தளிர்க்கும் குறுநகையும்
கொண்டே பக்தரைகுறை அண்டாதருள் தகையைக் (கண்டேன்)

சரணம்:
உண்டே! உதவும்கரம் உண்டே! அதனருளை
உண்டே, உவப்புமிக உண்டே! உயர்வும்மிகக்
கண்டே, உளத்தில்நிறை கொண்டே குருவருளை
விண்டே, பணிந்துபதம் கொண்டே விழியிரண்டில் (கண்டேன்)

(7)
ஸாவேரி (கண்ட சாபு)

பல்லவி:
கலிதீர அவதரித்தக் காலடிஶங் கரஜோதி
காஞ்சியில்ஜ யேந்திரராய் காட்சி தந்ததே

அனுபல்லவி:
ஜொலித்திடும் சொல்வன்மை சுடர்வீசும் மெய்ஞானம்
மலிந்திடும் வாக்கமுதம் மலர்ந்திடும் வதனமென (கலிதீர)

சரணம்:
வலிமிகுந்த வஞ்சகர்க்கும் வணங்காத வலிமையுடன்
பொலியருளை புன்சிரிப்பை பூரணமாய் கண்டோமே!
நலிவுற்ற தீனரெலாம் நாடோறும் நன்மையுற
சலியாமல் பலகாதம் தலந்தோறும் சென்றுலகில் (கலிதீர)

(8)
பைரவி (மிஸ்ரசாபு)

பல்லவி:
வேதநாதனுக்கே ப்ரணவாகார சாரத்தை
போதனைச் செய்த புண்யன் சுப்ரமண்யன்-கண்யன்

அனுபல்லவி:
சீதகம்பைக் கரையில் சந்த்ரசேகர சீலரருளால்
ஓதிச்சிறந்தானிந்த சுப்ரமண்யன்-லாவண்யன்

சரணம்:
இச்சாசக்தி, பொறியென்றாகி ஈன்றதன்றோ சுப்ரமண்யம்
ஈசனவன் க்ரியாசக்தி என்பதன்றோ சுப்ரமண்யம்
இச்சகத்தில் சந்த்ரசேகர ஈசனீந்த பெரும்புண்யம்
ஈசகுமரன் ஜயேந்திரயதி என்றேயான சுப்ரமண்யம்

(9)
கல்யாணி (ஆதி)

பல்லவி:
கண்டேன் கனிவொன்றைக் காமகோடியில்
விண்டேன் விதந்தேனது வேதவடிவென்று

அனுபல்லவி:
பண்டு காலடிதன்னில் பரிதிபோலே எழுந்தார்!
அண்டன் குலகுருவாய்! அவதாரப் புருஷனாய்! (அண்டன் -ஶிவன்)

சரணம்:
தண்டமேந்தும் கையில் தயையின்றி வேறில்லை
கண்டத்தெழும்பும் சொல்லில் கனிவின்றி வேறில்லை
மிண்டர்தம் தொல்லைக்கும் மிரண்டதே இல்லை!
சண்டமாருதம் வரினும் ஜயேந்திரர் சாய்ந்ததில்லை

(10)
தோடி (ஆதி)

பல்லவி:
நினைவாயென் நெஞ்சே – நிர்மலகுருவை
வினையாவும் கெடுமே – விளைந்திடும் நலமே

அனுபல்லவி:
தனைநாளும் ஜனசேவை தவத்தினி லேநிறுத்தி
முனைந்தே முதல்நின்ற முத்தர்ஜ யேந்திரரை

சரணம்:
சுனைநீர் போலவரே ஸுகம்தரும் ஶாந்தி
கனைகடல் போலொரு கருணைப் பெருநிதி
புனைதுறவுக் கோலம் புண்ணியத் தின்ததி (ததி-வலிமை)
நினையாமல் குருபாதம், நேருமோ சற்கதி?

(11)
ஸரஸ்வதி (ஆதி ¾ இடம்)

பல்லவி:
ஸத்குரு ஜயேந்திர ஸரஸ்வதி
நித்திய ஞானானந்த நிதிததி! -ஸ்ரீ (ஸத்குரு)

அனுபல்லவி:
அத்வைத ஆன்மிகக் குளிர்மதி
வித்தக வேதாந்த சன்மதி -ஸ்ரீ (ஸத்குரு)

சரணம் 1:
எத்தனைப் பிறவிகள் எடுத்தெடுத்திளைத்தாலும்
புத்தியில் உறவெனும் ஓயாதத் தொல்லை!
ஸத்குரு பாதங்கள் சற்றேயளைந்தாலும்
ஸத்திய மவையறும்; தளைகளும் இல்லை! -ஸ்ரீ (ஸத்குரு)

சரணம் 2:
முத்தரை மூண்டார்க்கு மோதம் வாய்திடுமே!
ஸத்தினைத் தள்ளார்க்கு ஶாந்தம் வந்திடுமே!
இத்தரை வாழ்வினில் இனிமையும் எளிமையும்
ஸத்குரு சரணங்கள் ஸந்ததம் தந்திடுமே -ஸ்ரீ (ஸத்குரு)

(12)
ஹிந்தோளம்: (ஆதி)

பல்லவி:
சந்த்ரசேகர ஸத்குரு வழியில்-ஜய
இந்த்ரஸரஸ்வதி கண்டோமே! – பூஜ்ய (சந்த்ர)

அனுபல்லவி:
மந்தஹாஸ முகமும் மாணிக்க வாக்கும் – ஆத்ம
பந்துவைப் போலொரு பரிவான நோக்கும் – கொண்டே (சந்த்ர)

சரணம்:
நிந்தனை செய்தார்க்கும் நினைந்தது அருளே-ஒரு
அந்தமில் அருட்கடல் ஆனவர் அவரே – குரு
கந்தனைப் போல்ஞானக் கடலுரு அவரே – வரு
சந்தக்கவி அனைத்தும் ஸத்குரு அருளே – திரு (சந்த்ர)

(13)
தேவமனோஹரி: (ஆதி)

பல்லவி:
குருஜயேந்திர ஸரஸ்வதி – திரு
வருள்பெற துதியவர் கழலன்றோ கதி!

அனுபல்லவி:
இருவினை தீர்க்கும், இறைபதம் சேர்க்கும்
இருள்நீக்கி மருள்போக்கும் இணையிலா ஜோதி

சரணம்:
கருணைத்திரு உருவும் கனிவான நகையும்
அருளாசி அள்ளித்தரும் அன்பான பேச்சும்
வருமாந்தர் யாவர்க்கும் வரையிலா சமபாவம்
தருந்துறவி நிழல்தரும் தருவான அனுபூதி!

(14)
ஸஹானா: (ஆதி)

பல்லவி:
காமாக்ஷி அன்னையே காருண்ய வடிவமாய்
காமகோடி குருமணியாய் வந்தனளே – கஞ்சி (காமாக்ஷி)

அனுபல்லவி:
ஏமம்துலங்கும் நெற்றி இனிமைதவழும் வதனம் (ஏமம்-திருநீறு)
சேமமளிக்கும் பார்வை செந்தழல்தவ உருவம் (காமாக்ஷி)

சரணம்:
தாமம்நல்கும் வாக்கு தயைநல்கும் கரங்கள் (தாமம்-பரமபதம்)
நேமம்நிறை தவசி நிறைதரும் சரணங்கள்
காமம்கடிந்த வாழ்வு காண்போர்க்கு பரவசம்
சேமம்தருவார் செம்மான் ஜயேந்திர ஸரஸ்வதி (காமாக்ஷி)

(15)
பந்துவராளி: (ஆதி)

பல்லவி:
ஜகத்குரு ஜயேந்த்ர ஸரஸ்வதி – பக்தர்
அகங்களில் நிறைந்திடும் அருள்நிதி – காஞ்சி

அனுபல்லவி:
காஶ்மீரம் முதலாய் கன்யாகுமரிவரை
ஶாஸ்வதமான ஸனாதனம்வளர்த்த (ஜகத்குரு)

சரணம்:
காஞ்சியதே நமக்கு கைலாசம் – நம்மை
வாஞ்சையுடன் காக்கும் வரகுருவே ஈஶன்
பூஞ்சையர்க்கும் கனிந்து புண்ணியமே நல்கும்
ஆஞ்ஜையை செய்யும் ஆச்சார்ய யதிமணி

(16)
ஹமீர்கல்யாணி (திஸ்ர ஆதி)

ஜயஜய ஶங்கர ஜயஜய ஶங்கர
ஜயஶங்கர குருவே!
ஜயஶங்கர குரு – ஜயேந்த்ர ஸரஸ்வதி
சின்மயதிரு உருவே!
ஒருமா தருநிழல் உறையும் இறையினை
உணர்வாய் கருநெஞ்சே!
குருவாய் வருவார் குஹனார் வடிவில்
குணமே கிடுமஞ்சேல்!
பருவம் செயுமாம் பலவாம் தொல்லை
பழியே தருவஞ்சம்
நெருப்பால் எரிப்பார் நெஞ்சில் நினைநல்
வழியாய் அடைதஞ்சம்
அருணைக் கோபுர அடியில் ஒருவர்க்(கு)
அளித்தார் அருள்தஞ்சம்
கருணைக் குருவாய் கனிவார் அவரே
கழலே பணிநெஞ்சே!
விருப்பும் வெறுப்பும் வீணாய் கொள்ளும்
விழைவே யினிதுஞ்சா!
உருவாய் அருவாய் உளதாம் குருநிழல்
ஒன்றே அருள்கொஞ்சும்
(17)
ப்ருந்தாவன ஸாரங்கா (ஆதி):

பல்லவி:
ப்ருந்தாவனம் கண்டேன் – அழகிய
ப்ருந்தாவனம் கண்டேன் – காஞ்சியில்
ப்ருந்தாவனம் கண்டேன் – பெரியவா
ப்ருந்தாவனம் கண்டேன் – காமகோடி
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்யும்
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்தருளும் – (ப்ருந்தாவனம்)

சரணம் 1:
பக்தருக்கெல்லாம் அவர் பெரியவர் – பாரில்
பக்தி அன்பு கருணை நெறியவர் – என்றும்
துறவு நெறி நின்ற துரியவர் – வடிவில்
அறமவர் அரிதின் அரியவர் – அவரின் – (ப்ருந்தாவனம்)

சரணம் 2:
சந்திரஶேகர குருவழி சென்றார் – ஜய
இந்திரஸரஸ்வதி நிலைபுகழ் நின்றார்
பந்தமதால் ப்ருந்தா வனத்திலும்
விந்தையவர் அருகே வீற்றிருப்பார் -அந்த (ப்ருந்தாவனம்)

சரணம் 3:
ஆதிசங்கரரின் அவதாரம் என்றே
அவனியில் ஆன்றோர்கள் கூறுவரே
ஆதிபரம்பொருள் அகண்ட ஜோதியாய்
அத்வைத சாரமாய் அமைந்த நம்குருவின் (ப்ருந்தாவனம்)

(18)

நீலமணி: (ஆதி)

பல்லவி:
தெய்வத்தின் குரலிங்கே தேடி வந்தது – அருள்
செய்கின்ற சேதியொன்றென் செவியில் கூறுது – அந்த (தெய்வத்தின்)

அனுபல்லவி:
வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய்
பெய்யுங்கருணை மழை பேரருள்ஜயேந்த்திர (தெய்வத்தின்)

சரணம்:
கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் – அத்
வைதநெறி காட்டும் அருளென வாக்கும்
வெய்யிலாம் வாழ்விலே தருவென நிழலும் – உயர்
மெய்ஞான போதமும் மோதமும் தருமந்த

*** ஜயேந்திர இசை மஞ்சரி நிறைவுற்றது ***

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

இப்படி எப்படி – கவியரங்கக் கவிதை.

ஜனவரி மாதம், கவிவேழம் இலந்தை இராமசாமியவர்களின் ஆன்ற தலைமையில் நடந்த இணையக் கவியரங்கத்திற்காக எழுதிய கவிதை..

————————————————————————
கவியரங்கம் – 44

தலைப்பு: : இப்படி எப்படி?

தொடக்கநாள்: 28-திசம்பர்-2017
இட்டநாள்: 11-சனவரி-2018

——————————————————————-

வேழமுகன் போற்றி!

வேழமுகம் போற்றி வினைகள் துவங்குவோர்க்குப்
பாழாமோ ஏதுமிந்த பாரினிலே? – வாழுமிந்த
வையத்தில் செந்தமிழாய் வந்துளத் தேகுதுதிக்
கையனே, நீயன்றோ காப்பு!

கவிவேழம் போற்றி!

ஆழப் பயின்றறிவில் ஆன்றதலை மைக்கவி
வேழம்நம் பாப்பயிர்க்கு வித்தாவார் – சூழும்
கவிவாணர் பூத்திங்குக் காய்த்துக் கனிய
உவந்தே இடுவார் உரம்!

கவிக்குலத்தோர் போற்றி!

செந்தமிழ்த் தேறலால் தீங்கவிகள் யாத்திடும்
சந்தவசந் தக்கவிச் சான்றோரே! – அந்தமின்றி
வந்துநாளும் இவ்வரங்கில் வட்டிக்கும் பாக்குலமே!
தந்தேன் உமக்கெல்லாம் தாழ்!

இப்படி எப்படி?

இப்படி எப்படி என்றே வியக்க
அப்பா! எத்தனை அதிசயம் உலகில்?
இப்படி எப்படி என்றே விதுப்புற
தப்பாய் எத்தனை தாரணி தன்னில்?
இப்படி எப்படி என்றே நினைக்க
சிப்பியின் முத்தாய் சிந்தனைக் குவியலைச்
செப்ப முடைத்தாய் செதுக்கிப் புதுக்க
இப்பா வரங்கில் எத்தனைக் கவிஞர்? ….(1)

சங்கத் தமிழ்ப்பா சாற்றுங் கவிக்குலம்
இங்கே திரண்டு எழுதும் கவிதைகள்
பங்கில் உமையொரு பாகன் கூரைகீழ்
தங்கத் தாமரை தடாகம் தன்னிலே
பொங்கும் புனல்மேல் பொலியும் பலகையாய்
நங்கவி யாப்பை நன்றெனில் ஏற்கும்!
மங்கிய தென்றால் மயக்கம் நீக்கித்
பங்கம் வராமல் பகரே செய்யும்!….(2)

இவர்கள் வாக்கில் எத்தனைப் பொருட்கள்!
உவக்கச் சிலவாம், உவட்டும் சிலவாம்!
கவர்ந்து உள்ளம் கனியச் சிலவாம்!
சிவந்து கண்கள் சினக்கச் சிலவாம்
பவத்தில் காணும் பருப்பொருள் எல்லாம்
சிவமே என்னும் சிந்தனை சிலவாம்!
அவமே ஆயினும் அழகாய் கவிதைத்
தவமாய் தமிழால் தழைக்கும் புலமாம்!….(3)

நாட்டு நடப்பினில் நாளும் வெதும்பி
நாட்டம் வாழ்வில் நலிந்த மனங்களை,
ஈட்டும் வழியெதும் இல்லா தொழிந்து
கேட்டில் உழன்று கிழியும் உடல்களை,
ஆட்டம் போட்டு அரசியல் செய்து
வேட்டை யாடிடும் வீணர் கும்பலை,
ஓட்டை விற்கும் ஒழுக்க கேட்டைச்
சாட்டை கொண்டு சாடும் கவிகள்!….(4)

சூட்டிகை யில்லா சுதந்திர மக்களை,
தீட்டென தீயத் தீண்டா மையெனும்
பூட்டினை இன்னும் போடுவார் தம்மை,
பாட்டிலே பிறமொழிப் பதங்கள் சேர்த்து
‘நோட்டுக்’ காக நுவல்திரைக் கவிகளை
மேட்டுக் குடியின் மேதமை யென்று
நீட்டி முழக்கும் நிருமூ டிகளைக்
காட்டிக் கசையடிக் கனலாய் கவிகள்!….(5)

இத்தரை மீதினில் எத்தனை மதங்கள்?
நித்தமும் அவற்றால் நேர்பவை காணின்,
சித்தரும் முத்தரும் சீரறி வாளரும்
வித்தகச் சாத்திர வேதவல் லோர்களும்
பித்தம் நீக்கப் பிறந்து இவணா?
புத்தர் பிறந்ததும் போதியின் கீழதில்
உத்தம ஞானம் உணர்ந்துப் பெற்றதும்
சத்தியம் தானா? சாத்தியம் தானா?….(6)

எங்கே நேர்மை? எங்கே ஒண்மை?
எங்கே உண்மை? எங்கே தூய்மை?
எங்கே எங்கே எங்கே என்றே
அங்கும் இங்கும் அலையும் மனங்கள்
சிங்க மாகச் சீறும் குரல்கள்
அங்கதப் பேச்சு, அங்க லாய்ப்புகள்!
இங்கே எப்படி இப்படி யாச்சென,
கங்குல் நிலைக்காய் கதறும் கவிகள்!….(7)

கவிகள் வாக்கில் கனலுண் டானால்
கவிதை பூக்கள் கனன்றெழு மானால்
புவிமேல் சத்தியம் புன்மைகள் மாயும்!
கவிந்த இருளும் கன்மக் கேடும்
அவியும்! அளிசெய் ஆதவன் அருளால்
சவியுடன் மீளும் சகமும் ஒருநாள்!
கவிவல் லோரே! கருமாய் அதனால்,
கவியாப் பீரே! கவியாப் பீரே!….(8)

இப்படி எப்படி என்பது வேதனை!
இப்படி எப்படி என்பது வியப்பு!
இப்படி எப்படி என்பது சீற்றம்!
இப்படி எப்படி என்பது சிந்தனை!
செப்படி வித்தை செய்வது இல்லை!
தப்படி வைத்தால் தப்புவ தென்னாம்?
அப்படி யன்றி, அதனால் கேட்போம்
இப்படி எப்படி என்றே கவிதையில்!….(9)

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

ஸ்டீஃபன் ஹாக்கிங் (1942-2018)

ஸ்டீஃபன் ஹாக்கிங்!
(ஜனவரி 1942- மார்ச் 2018)

நேரத்தின் சுருக்கமான வரலாற்றை
…நிறையாக ஆராய்ந்து நூலாக்கி
சீரான விஞ்ஞான விளக்காக
…செப்பமுற செய்தஸ்டீஃ பன்ஹாக்கிங்
பாரேத்தக் கோட்பாட்டு  இயற்பியலில்
…பரிமளித்த விஞ்ஞான மேதையாக
பேரேற்று  வாழ்ந்துலகில் இன்றுசென்றார்,
…பெரும்பயணத் தாரகையாய் விண்வெளியில்!

ஞாலத்தின் தொன்றுதொட்ட ஞானவேள்வி
…ஞானியர்விஞ் ஞானியர்கள் தம்வழியில்
காலத்தின் துவக்கத்தை, எல்லையில்லா
…ககனத்தைக் கணிக்கின்ற வானவேள்வி!
சீலநெறிச் செல்வரோடு ஸ்டீபனைப்போல்
…சிந்திக்கும் அறிவியலார் செய்ததெல்லாம்
தூலமில்லா துரியத்தின் துளைபுகுந்து
…துன்னியுணர் வெய்துகின்ற சோதனைதாம்!

காலமெல்லாம் கடந்தவந்த கண்ணுதலான்
…கருத்தினைத்தான் யாரறிவார்? யார்கணிப்பார்?
ஆலத்தின்கீழ் அமர்ந்தந்த நால்வருக்கு
…அமைதியாக உபதேசம் செய்துவித்த
காலகாலன் கங்கைநாதன் கண்மலர்ந்து
…கனிவுடனே வரவேற்று ஒருவேளை
சாலவுரைப் பானோயிம் மாயையெல்லாம்?
…சற்றும்யாம் அறியோமே  பராபரமே!
Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment