ஸ்கந்தாதி சதகம்

17th நவம்பர் 2015

முருகன் மலை, கலிஃபோர்னியா

இன்று சஷ்டி நிறைவு நாள்… இன்றைக்குள் நண்பர் சு.ரவி சுட்டியபடி அந்தாதியை நூறுபாடல்களில் நிறைவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால்.. அவன் சித்தம் அப்படியில்லையே.. 50 தான் முடிக்க முடிந்தது. விரைவில் நூறும் முடித்துவைப்பான் என்றே நம்புகிறேன்.. இந்த ஸ்கந்தாதி (ஸ்கந்த அந்தாதியின் முதற்பாதி இப்போது! அறிந்த நண்பர்களே குற்றங்களிருப்பின் மறவாது சுட்டவும்.. திருத்திவிடுகிறேன்..

நிறைவுற்ற நாள்: 26th நவம்பர் 2015

ஸ்கந்தாதி சதகம்

காப்பு:

அறுமுகன் அண்ணனே ஐங்கரனே அன்பர்க்
குறுதுணை யாய்நின்ற குன்றே – நறுங்கூந்தல்
அன்னையுமை பாலனே ஆனைமுகத் தேவனே
நன்றென்தன் நாவில்நீ நில்லு (0)

அந்தாதி:

அறுமுக அண்ணல் அருள்தரும் வள்ளல்
குறுநகை மேவும் குஹனாம் – அறுப்பான்
ஒறுப்பான் பகையதனால் ஓங்கிட நாளும்
நிறுத்தியே நெஞ்சில் நினை (1)

நினைந்தே அவன்நாமம் நித்தமும் ஓத
நனைப்பான் அருளால் நயந்து- வினையத்
தனையும் கெடவே தயைசெய் தணிகே
சனைதொழு தேத்துவாய் சற்று (2)

சற்றும் பரவியான் சாற்றேன் புகழ்மாலை
கற்றும் கணமும் கனிந்திலேன் – வெற்றாய
பற்றினில் பாதிநாள் போகவே செய்வாயே
முற்றுன் கழலேயென் மூச்சு (3)

மூச்சிலுன் நாமம்தான் முந்து தமிழ்தந்த
பேச்சிலும் உன்புகழே பேசுவேன் – தீச்சுடர்
வீச்சாய் தெரித்தெழுந்த வீரனே வேலாவா
பூச்சொரிவாய் பாவிலே புக்கு (4)

புக்கென் உளத்தில் பூத்தெழுந்த புண்ணியா
சிக்கல் தலம்நின்ற சிங்காரா – திக்கெட்டும்
எக்கணமும் உன்னருளால் ஏற்ற முறவேநான்
இக்கணமே தாராயோ ஈந்து (5)

ஈந்தார்க்கே ஆசிரியா எங்கள் குருபரா
சேந்தா சிவகுமரா சேல்மருகா – ஆந்தரா
மாந்தி உனதழகில் மாலகி னேனுக்கு
காந்தியை தந்துநிதம் கா (6)

காவாவா என்று கரைந்தோர்க்கு கந்தவேளே
மூவாசை நோயை முடிப்பாயே – மாவாலன்
ஆவாய்நீ ஆறுமுக ஆண்டவா தேவாதி
தேவாவந் தெம்குறை தீர் (7)

தீர்ப்பாய் எனநான் தினமென் குறைகளை
கூர்வேல் குமரனே கூறுவேன் – பார்மீது
சீர்பரங் குன்றத்து சீலா உனையன்றி
சீர்செய்வ தார்சொல் சிறிது (8)

சிறிதேனும் நின்கருணை சிந்தித் திலேன்யான்
அறிந்தார்க்கும் எட்டா அறிவே – செறிவே
எறிந்தாய்நீ வேலை எதிர்பட்ட சூரன்
முறியவே மூச்சும் முடிந்து (9)

முடிந்துடல் இற்றென்னை மூடித்தீ பற்றி
பிடிச்சாம்ப லாகுமென் பீடு – நொடித்து
வடிவொடு வாக்குமே வற்றிடும் முன்னர்
அடிதந் தகத்(ந்)தை அறு. (10)

அறுத்தேயென் பற்றினை ஆற்றுப் படுத்தி
உறுத்துவாய் உள்ளில் ஒடுக்கம் – நறுவும்
முறுவல் தவழும் முருகா – எமக்குள்
இறுகிநீ என்றும் இரு (11)

இருவினை தீரவும் ஈண்டுனை ஏத்த
ஒருவரம் வேண்டும் உரவோய் – முருகா
திருமால் மருகா திருவாய் உளத்தில்
தருவாய் தயவாய் தடம் (12)

தடம்தனைக் காட்டும் தணிகா சலனே
அடல்வேல் அணிசெய் அரசே – கடம்பா
திடபக்தி தந்துமுறை தீராய்வு தாரா
மடமையை நீக்கிடெம் மாட்டு (13)

மாட்டுடை தேவன் மஹாதேவன் மைந்தனாய்
தேட்டமாய் வந்துதித்த தேவனே – நாட்டமுடன்
கேட்டவரம் தந்தருள்காங் கேயா கருணையுடன்
காட்டுவாய் கந்தா கதி (14)

கதியென் றுளத்தில் கருதிடும் கந்தா
விதியும் வணங்கும் விமலா – மதியோன்
ததியே மயிலோய் தயாநிதி செந்தில்
பதியே அருள்வாயோ பாடு? (15)

பாடும் இசையும் பொருளோடு பாவழகும்
கூடும் கவிதை குஹனேயாம் – வாடுறாது
நாடு மனமதில் நாளும் நலமுடன்
நீடு நினைதாள் நிதம் (16)

நிதமுன் பதமே நினைவேன் தொழுவேன்
இதமும் அதுவே எனக்கு – சதமும்
முதமே முருகோய் முயல்வேன் எனையற்
புதமாய்நீ போடு புடம் (17)

புடமணிந்த பாலா பொதினிவாழ் வேலா
புடம்செய் தெமைநீ புதுக்கு – நடம்செய்
விடமுண்ட கண்டன் விரும்பும் மகனே
திடமொடு தீரமென்னில் தேக்கு (18) (புடம் – கோவணம், தூய்மை)

தேக்கமில் வாழ்வும் தெளிந்தநல் ஞானமும்
ஆக்கமும் நல்கும் அழகனே- பாக்களில்
பூக்கும் பருப்பொருளே புண்ணியா ஞாலத்தின்
சூக்குமமே நீயே சுடர் (19)

சுடராழி போல்சொலிக்கும் சுப்பாநீ காப்பாய்
இடராழி போல்வரினும் என்றும்- உடலம்
அடங்கும்நாள் என்றோ அறியோம் எமக்கும் 
சுடரா குமுபாயம் சுட்டு (20)

சுட்டு தரும்சோதி சுப்ரமண்ய சோதியாம்
எட்டுக் குடிவீற்ற இன்சோதி – நிட்டைதரு
அட்டமா சித்திதரு ஆன்மசோதி கந்தசோதி
விட்டகலா துள்ளத்தில் வீற்று (21) (சுட்டு – பெருமை)

வீற்றிருக்கும் ஆறுபடை வீடுடையாய் சூரனுக்கு
கூற்றுவ வேலெடுத்து குன்றெறிந்தாய் – போற்றிடு
ஆற்றுப் படைநூல் அணியுடையாய் – ஆதரித்து
ஊற்றெடுக்கும் நின்னருளை ஊட்டு (22)

ஊட்டிய நற்றமிழால் உள்ளமுவந் துன்புகழைப்
பாட்டாலே ஏத்திநான் பாடுவேன் – கேட்பேனே
ஈட்டமாய் ஒன்றேயான் ஈசனார் மைந்தனே
வாட்டமிலா உள்ளம் வழங்கு (23)

வழங்கிடு வள்ளலே வானம்பெய் தாற்போல்
அழகனே ஆதுரம்நீ அன்றோ- பழமே
பழநியாம் குன்றுமேவி பாலிக்கும் பாலா
அழல்வஞ்சம் உள்ளில் அகற்று (24)

அகற்றுவாய் வஞ்சம் அடியோ டிருந்தென்
அகத்தில் ஒளிர்ந்தே அமலா – செகத்தில்
மகத்தை அளிப்பாய் மயிலோய் முருகா
இகத்தில் துணையாய் எனக்கு (25)

எனக்கெனக் கென்றே எதற்காய் சுயத்தில்
வனமிருகம் போல்வேலா வாழ்வு – மனத்தில்
தனக்கென வாழ்ந்தே தருக்கினே னென்னை
உனதாக்கி நீயே உயர்த்து (26)

உயர்த்தும் ஒளியே உலகில்நீ யல்லால்
அயர்ந்தே கிடப்பேன் அனகா – தயவாய்
மயலும் செயமாய் மயங்க -வயலூர்
பயந்த மறப்பிலியே பார் (27) (மறப்பிலி -வயலூர் முருகன்)

பார்க்கும் விழியால் பரவசத்தில் ஈர்க்கின்ற
ஆர்க்கும் அலைவாய் அயில்வேலா – தீர்த்தின்றே
பார்க்குள் பரவுகின்ற பற்றுயாவும் பற்றாது
கார்போல் அருள்வாய் கனிந்து (28)

கனிந்திடும் கண்களால் கந்ததெனும் காந்தன்
இனிக்கும் முறுவலான் ஈர்ப்பான் – புனிதன்
முனிவோர் முயன்றாலும் முற்றும் துறக்கா
பனிச்சடை பெற்ற பளிங்கு (29)

பளிங்குபோல் மேனியும் பாலன்ன நீறும்
மிளிர்கின்ற மால்மருகன் மேயோன்- விளித்துக்
களிற்றைக் குறமகள் கன்னியைக் கூடும்
ஒளியைநீ ஓதி உணர் (30)

உணரும் பொருளாய் உலகோர் வழுத்தும்
தணலாய் பிறந்த தயையே – கணமும்
நிணமா யவுடல் நினையே முருகா
உணர்வில் இருத்த உதவு (31)

உதவும் கரங்கள் உனதென் றறிந்தும்
மதமே றியதால் மறந்தோம் – நிதமும்
இதமே எமக்கு இனிதாய் தருமற்
புதத்தை முருகா புரி (32)

புரிந்த வினையாவும் புண்ணியா நீயே
சரிசெய் அடைந்தோம் சரணம் – துரியா
கரிசோ தரனே கடம்பனே கந்தா
அரிந்திடென் மாயை அற (33)

அறவாழ் வதுவை அறியேன் எனையும்
மறவா தருள்மால் மருகா – உறவாய்
குறவள் ளிபுணர் குறிஞ்சித் தலைவா
அறமேநான் ஆற்ற அருள் (34)

அருள்பழமு திர்சோலை ஆண்டவா ஔவைக்
கொருபழத் தால்செய்தாய் கோடி – வருந்த
கருங்காலிக் கட்டைக்குக் கோணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு இற்று (35) (கோடி – வளைவு, முறிவு)

இற்றகந்தை நான்முகற்கு இல்லா தொழியவே
சற்றே சிறைவைத்த சண்முகா – பெற்றவனும்
கற்றிடவே வாய்பொத்திக் கைகட்டிக் கீழமர்ந்து
கற்றவேர கத்தோய்நீ காப்பு (36) 

காப்பும் கருணையும் கந்தன் கழலேயாம்
கூப்பிக் கரங்களால் கும்பிடுவோம் – பாப்பாட
நாப்புரள நாதனே நம்பிக்கை – நம்வாழ்வை
தூப்பஞ்செய் தூக்கும் துணை (37) (தூப்பம் – சுத்தம் செய்தல்)

துணையும்நீ பற்றிடு தூணும் துலங்கப்
பிணையும்நீ உள்ளப் பிலம்நீ – அணைத்தே
பணைத்திடச் செய்யும் பரமா குறிஞ்சித்  
திணைக்கரசே நீயேயென் திக்கு (38) (பிலம் – குகை)

திக்கும் அறியாமல் தேடித் திரிவோர்க்கு
புக்கே முருகன் புகலுமவன் – சிக்கெனவே
எக்கணமும் எந்தையை எட்டிப் பிடித்தாலே
துக்கமெலாம் நீங்கும் துவண்டு (39)

துவண்டு விடாதெனைத் தூக்கி நிறுத்தும்
சிவபாலன் செந்திலன் சீலன் – அவஞ்செய்
பவநோ யறவேசெய் பாலசுப்ர மண்யன்
தவமாக பற்றிடவன் தாள் (40)

தாள்தந்து காக்கும் தயாபரா நீயிவண்வந்
தாள்கந்தா என்னுளத் தாபமற – கோள்மற்று
நாள்தான் எவன்செயும் நாதனே நீயிருக்க
நீள்வினையும் செல்லாதோ நீத்து (41)

நீத்துடலும் சென்றெரிந்து நீராகும் வேளைவரை
காத்துந்தன் கண்பாராய் கந்தவேளே – கூத்தபிரான்
தீத்தணலே தென்னோர் திருக்குமரா கார்த்திகேய
மாத்தழித்து மாட்சியுற மாற்று (42) (மாத்து – செருக்கு)

மாற்றுக் குறையாத மாதங்க மேனியனே
ஆற்றுப் படைநின்ற ஆறுமுகா – நோற்றுனை
போற்று மெனக்குநீ போதமே நல்கியும்
தேற்றுவாய் தேவனே தெற்று (43) (தெற்று – உறுதியாய்; போதம்-ஞானம்)

தெற்றியும் வெற்றிவேல் தேவனைத் தேறிலேன்
முற்றும் மதியிழந்து மூடனாய்ச் – சுற்றினேன்
இற்றுடல் வற்றியே ஈற்றுநாள் முற்றவே
பற்றினேனுக் குண்டோ பரிவு (44) (தெற்றி – தவறிழைத்தும்)

பரிவுடன் பார்த்தருள் பாலமுரு கைய்யா
திரிந்தே னெனைநீ திருத்திப் – புரிவாய்
அரிமால் மருகாவுன் அற்புதமே! தாயேன்!
கரிசோ தரநின் கழல்! (45)

கழல்கண்டு கண்குளிர கந்தனே வந்தான்
அழல்நெஞ் சவித்தெனை ஆண்டான் – அழகன்
உழற்றிடு துன்பெலாம் ஒன்றிலாச் செய்தான்
தொழவென்தன் நாவில்பா தொட்டு (46)

தொட்டுத் துயில்நீக்கும் தோகைமயில் வாஹனே
கட்டும் வினைமாற்றிக் காப்பாயோ? – கெட்டேனை
தட்டிச்சீர் செய்கைவேல் தானுண்டே – இன்னும்நீ
எட்டிநிற்கும் வேடிக்கை ஏன்! (47)

ஏன்என்று கேள்விகள் எத்தனையோ என்னிடத்தில்
கோன்என்று உன்னிடமே கொட்டுகிறேன் – தான்என்று
ஊன்பொதியேன் உண்மை உணரேன் உமைபாலா
நான்பொருளோ இன்றுன் நகைக்கு (48)

நகைக்கும் உலகென் நலிவினில் நன்றாய்
அகைதல் அலனாய் அழுதால் – பகையோ
குகையாம் மனத்தில் குடியே றியவா?
தகைமைப் பெறவரந் தா! (49) (அகைதல் – செழித்தல், தளிர்த்தல்)

தாளா எனவுந்தன் தாளினைப் பற்றினேனை
மாளாத் துயரில்நீ மாட்டாதே! – கேளாயோ
தாளாக் குறையைத் தணிகேசா சேவடிக்கு
ஆளானேன் அல்லலின்றி ஆக்கு (50)

ஆக்கமும் நீயனகா ஆக்கத்துக் கூக்கமும்நீ
சூக்குமம் நீமுருகா தூலமும்நீ – நீக்கமும்
தேக்கமும்நீ ஆன்மமும் தேகமும்நீ பாக்களாய்
வாக்கிலே பூக்க வளர் (51) (நீக்கம்- இன்மை; தேக்கம்: நிறைவு)

வளர்மதி சூடி வரமாக வானோர்
உளங்கள் குளிர உதித்தான் – களத்தில்
பிளந்துடல் சூரனின் பீடை தொலைத்த
இளங்கும ரர்க்குயார் ஈடு? (52)

ஈடும் இணையும் இலாதவன் வேலனாம்
ஏடுடை நான்முகன் ஏத்துதேவன் – ஓடுடை
காடுடை ஆதிநாய கன்பொறி! சூரனுக்கு
கேடுதர வந்ததூம கேது (53)

கேதுவாய் சேவலுக் கேயளித்தான் ஏற்றமும்
மோதும் அலைநகர் மோதிதன் – கோதிலா
மாதுதேவ யானை மணந்தமா யோன்மருகன்
ஓதுபுகழ் ஓதிநிதம் ஓங்கு (54) (கேது – கொடி; மோதிதன் – களிப்புடையவன்)

ஓங்குவது உன்னருளால் ஓம்புவதும் உன்கருணை
தாங்கியே காப்பாய்நான் தாழாமல் – பாங்குடனே
ஈங்குனை யேநான் இரப்பதொன் றுண்டுகந்தா
தீங்கொடிடர் வாராமல் தேற்று (55)

தேற்றித் தெளிவாக்கும் தேவா முருகனே
மாற்றிடு ஊழை மயிலோனே – வீற்றுளத்து
ஆற்றுவா யென்பொறிகள் ஐந்தும் அவித்திடும்
ஆற்றலை நீயே அளித்து (56)

அளித்துத் தமிழால் அவனைப் பரவிக்
களிக்கத் தருவான் கடம்பன் – துளிர்த்தே
மிளிர்வான் கவியென மின்னுதற் கண்ணில்
தளிர்த்த பொறியாம் தணல் (57)

தணலாய வஞ்சத் தருக்கை அழித்தே
குணமே தருவாய் குமரா – கணமும்
சுணங்கா துனையே சுமந்தேன் உளத்தில்
நிணமாய தீவினை நீக்கு (58) (நிணம் – கொழுப்பு)

நீக்குவாய் நின்னை நினையா நினைப்பினை
தேக்குவாய் உன்பக்கத் தேயெனை – வாக்கினைக்
காக்கின்ற வல்லான் கணேசற் கிளையோயே
ஆக்குவது நீயேதான் ஆண்டு (59)

ஆண்டுகள் போயின அங்கங்கள் ஓய்ந்தன
மாண்டு பிறக்க மனமில்லை – ஈண்டாவிக்
கூண்டில் தவிக்கும் குறையுற்றேன் கந்தனே
காண்பதற்குன் காட்சியை காட்டு! (60)

காட்டுன் கழலிணை கண்ணாறக் காண்பதற்கு
கூட்டெனை அன்பர் குழாத்திடை – ஆட்டியுளம்
வாட்டும் கொடுந்தீய வஞ்சப் புலனைந்தைப்
பூட்டியே ஆக்கெனைப் பூண் (61)

பூண்செய்து போற்றவுனைப் புண்ணியம் நல்கெனக்கு
மாண்தந்து மாற்றென் மயக்கத்தை – சேண்சென்று
ஆண்டியாய் கோலமிட்ட ஆறுமுகா – நானுன்னை
வேண்டுவ தில்லையே வேறு (62) (பூண்- அணி; சேண்- மலை)

வேறுகதி உன்னையல்லால் வேலவனே யாருளர்?
ஆறுதலைத் தாராயோ ஆறுமுகா – ஆறமர்ந்து
சேறுளத்தை சீரெனச்செய் சேந்தனே – செந்திலா
ஏறுமயில் வாகயெனை ஏற்று (63) (ஆறமர்ந்து – ஆக்ஞையில் அமர்ந்து)

ஏற்றமும் தாழ்வதுவும் ஏழ்பிறப்பின் சூழ்வினை
மாற்றியும் ஆற்றுவன் மால்மருகன் – சாற்றியே
போற்றவன் நாமமே! பொங்கும்நல் வாழ்வுமே!
நோற்றிட இல்லையென்றும் நோய் (64)

நோய்வந் துடல்நைந்து நொந்துதழல் வேகையிலும்
வாய்கூற நாமமருள் வாய்முருகா – தாய்போலே
சேய்க்குப் பரிவாயே சேயோனே! தஞ்சம்நீ
காய்வதற்கு முன்நீ கனி (65)

கனியாம் புரந்தரன் கன்னிதேவ யானைப்
புனிதைக் கரம்பற்று புண்யா – இனிக்க
இனிக்கவென் நாவில் இலங்கு தமிழாய்
நனிநின்று மேவுவாய் நன்று (66) (புரந்தரன் – இந்திரன்)

நன்றுநீ நாளும்செய் நாடகமே நானிலமாம்
ஒன்றும் அறியேனும் ஓரங்கம்! – என்றுவேடம்
கன்றிக் கலைப்பதோ கந்தனே ஒன்றவுன்னில்?
குன்றக் குமரனே கூறு (67)

கூறுமறை பாடும் குமரேசா கோலமயில்
ஏறுமறு மாமுக ஏந்தலே – வீறுகொண்டு
கூறுசெய்து சூரனை குன்றுருவ வேல்வாங்கி
மாறுபடச் செய்தாய் மடிந்து (68)

மடிந்து மிடிமை மலரும் வளமை
விடிவில் வருவது வீடு! – குடியை
வடிவாய் செயவே வருவான் அவனே
வடிவே லவனாம் வணங்கு (69)

வணங்கு குமரெனன்று வல்மறைகள் கூறும்
கணமும் அதைநான் கருதேன் – நுணங்கு
அணங்கின் அழகில் அழிந்தேன் எனைநீ
திணமாய் திருத்தித் திருப்பு (70) 

(நுணங்கு – நுட்பம், திணம் – வலிமையுடையவனாக்கி)

திருப்புகழ் கொண்ட திருவே குமரா 
அருள்வாய் தமிழே அமுதாய்- கருவும்
பொருளும் திருவாய் பொதிந்தென் கவிக்கு
எருவாய் தருவாக்கி ஏற்று (71)

ஏற்றுவேன் உள்ளத்தில் என்கண் முருகனை
போற்றி யவன்புகழ் பொன்னடியை – நாற்கவியும்
சாற்றென நற்றமிழ் சாற்றினை நாவினில்
ஊற்றுவான்நான் பாட உவந்து (72)

உவந்துன் திருநாமம் ஓதுவேனோங் காரா
அவமாயை நீக்கியெனை ஆற்று – தவமே
சிவனார்க்கும் செல்வமே சீலசெந்தில் பாலா
நவவாழ்வை நாளும்நீ நல்கு (73)

நல்குவான் நல்லனவே நம்குரு நாதனாம்
அல்லல் அகற்றுவான் ஆறுமுகன் – கல்லாத
புல்லரும் வல்லராய் பூமியோர் போற்றிட
வல்லமைக்கு ஈவான் வரம் (74)

வரம்பெற்றா ளோவன வள்ளியுனைக் கூட
சிரமாறு கொண்டு சிறந்தோனே! – அள்ளிக்
கரமேந்தி கொஞ்சிட கார்த்திகைப் பெண்டிர்
இரந்த வரமுந்தான் என்? (75)

என்னுள்ளத் தென்றோ எழிலாய் இறங்கிய
மின்னே அரன்செல்வ! மீகாமா – உன்னருளால்
என்னையும் இந்நிலத்தில் ஏற்றமுறச் செய்யுமய்யா
சென்னிமலைச் யோனேசீர் செய்து (76) (மீகாமன் – கப்பலோட்டி)

செய்துளத்தைச் செப்பமாக செம்மான் மகள்நேயன்
கொய்தகற்றி னான்கன்மக் கோதினை – மெய்ப்பொருள்
தெய்வமாம் வள்ளியூர் தேவன் – கருணைமழைப்
பெய்தருளி காக்கின்ற பேறு (77) (கோது – குற்றம்)

பேறுநீ பெம்மானே பெற்றதாய் தந்தைக்கும்
ஏறுபோல் சூரனை எற்றினாய் – வீறுகொண்ட
ஆறுமுகா! ஆந்துணையே! ஆவலை ஆற்றியே
தேறுதல்தா சூழ்பகை தெற்று (78) 

(தேறு – தெளிதல்; தெற்று – இடறச் செய்தல்)

தெற்றுநான் வீழினும் தேம்பித் திரியேனே
முற்றிலும் தோற்றும் முடங்கிலேன் – நெற்றிக்கண்
பெற்று விளைவித்த பேறேநான் – இற்றாலும்
வற்றாத வாழ்வுதந்த வா (79)

வாழினும் வாடினும் வள்ளல் வயலூரன்
பாழியே செய்வான் பரிந்துள்ளம் – தாழினும்
வீழினும் காக்க விரைவான்நம் கந்தனே
கோழிக் கொடியானக் கோ (80) (பாழி – பெருமை)

கோலமயில் ஏறும் கொழுந்தாம் குமரனே
ஞாலம் புரக்கின்ற ஞானமாம் – ஆலமுண்ட
நீலகண்ட நாதனீன்ற நிர்மல பாலனாம்
வேலனின் தெய்வம்யார் வேறு? (81)

வேறுபடச் சூரனை வேலெறிந்து மாமரத்தை
வீறுகொளக் கூறுசெய்த வீரனே – ஞாறுபெற
ஆறுதந்து ஐந்தவித்த ஐயனே! யாமுற்ற
ஊறுநீக்கி போக்கிடெம் உட்கு (82) 

(ஞாறு – மணம்; ஆறு-ஆறாம் சக்கரம், ஐந்து – ஐம்புலன்கள்; உட்கு – அச்சம்))

உட்குதல் போக்கி உளத்திலங் கோங்காரா 
விட்டக லாதென்னில் வீறுதா – சூரனைத்
தொட்டு ருவவேல் தொடுத்த உமைபாலா
சுட்டென்னில் போக்குவாய் சூது (83)

சூதுசெய் வார்க்குமே சுட்டெறித்து தீய்க்காது
கோதுநீக்கி வாழ்வை கொடுப்பாய் – குமரனே
ஏதுனைப் போலே எமைக்காக்கும் தெய்வமே?
ஓதுவோம் உம்புகழே ஓர்த்து (84)

ஓர்த்துயர் ஞானசக்தி ஓருரு வாயுதித்த
கார்த்திகை பாலனே கந்தனே – கூர்வேலா
கார்போலே நெஞ்சில் கருத்தார்க்குக் காலனாம்
மூர்த்தியே என்னுள்நீ முந்து (85)

முந்து தமிழே முருகன் சிகிவாகன்
கந்தன் குமரேசன் காங்கேயன் – சந்தமும்
தந்தே கவிதைத் தருவான் வரமென
எந்தை எனக்குள் அமர்ந்து (86)

அமர்ந்து அகந்தை அறுப்பான் அகத்தில்
குமரன் அமரன் குஹனே – சமர்மேல்
நமன்போல் பொருதே நசித்தும் பரிவான்
தமர்போல் கனிந்து தயை (87)

தயையே புரிவான் தணிகைத் தலைவன் 
வயலூர் உறைந்திடு வள்ளல் – பயந்த
மயலை அகற்றும் மயிலம் முருகன்
செயமே தருவான் செகத்து (88)

செகத்தைப் புரந்திடு சேயோன் முருகன்
மகத்தை அறிவாய் மனமே – அகத்தில்
உகந்து நினைந்து உணர்வோர் தமக்கு
இகத்தில் தகவே இலை (89) (தகவு – வருத்தம்)

இலையே இணையாய் இறையே அவனே
மலைதொறும் மேவும் மயிலோன் – குலைந்தே
அலையும் மனத்தில் அமைதியை நல்க
நிலையாய் உளத்தினில் நின்று (90)

நின்றுளத்து வீற்றிருக்கும் நீலமயில் வாகனா
என்றுமுன்னை உள்ளிருத்தி ஏத்துவேன் – பொன்றசுரர்
வென்றவுணன் சூரனவன் வெற்பொடித்த வேலவா
நன்றுகவி யாய்நில்லென் நா (91) (வெற்பு – மலை)

நாவாலே நாற்கவியும் நல்கப் பணித்தவா
நாவாயாய் உன்னையே நாடினேன் – தேவாநீ
மூவா மருந்தாவாய் முத்தமிழ் முன்னவனே
தூவா தருவாய் துப்பு (92)

(நாவாய் – பயணிக்கும் கலம்; தூவா – பற்றுக்கோடாம், துப்பு – வலிமை)

துப்பும் துலக்கமும் தூண்டுவதும் சண்முகன்
அப்பன் குருவாய அண்ணலாம் – ஒப்பில்லா
சுப்பா உனையேதான் சுற்றுவேன் சுந்தரா
தப்பாமல் நீயென்னைத் தாங்கு (93)

தாங்கும் தயாளா தணிகைத் தலத்தோனே
ஓங்கவுன் ஒண்புகழ் ஓதுவேன் – ஓங்காரா
ஊங்கிலை உன்போல் உயர்தெய்வம்; உன்னதா
தீங்குயாவும் தீர்ப்பாயே தீய்த்து (94)

தீய்த்து வினையாவும் தீர்ந்திடச் செய்வாயோ?
சேய்க்குநீ தாயன்றோ சேயோனே – நோய்நீக்கி
தூய்நெறி காட்டித் துலக்குவாய் துங்கனே
மாய்கை அகற்றியெனை மாற்று (95)) (மாய்கை – மாயை)

மாற்றுவாய் மண்டிய மாசகற்றி மால்மருகா
தேற்றுவாய் துன்பத்தே தேயாது – நோற்றுனை
நேற்றுவரைப் போற்றிலேன் நெக்குருகி உன்நாமம்
சாற்றிலே னுக்குண்டோ சால்பு? (96) (சால்பு – மேன்மை)

சால்பொடு சான்றாண்மை சண்முகா நின்னருள்
சேல்மரு காதொழுதேன் சென்னியால் – ஆல்கீழார்
கால்முருகா கைதூக்கும் காருண்யா கந்தனேயென்
பால்யாரே பார்ப்பார் பரிந்து? (97) (கால் -மகன்)

பரிந்தெமை பாலிக்கும் பாகுலேயா ஆடும்
பரிமேல் வருவேற் படையோய் – துரியா
கரியோன் இளையோய் கணமும் குறியேன்
தெரியேனுக் கும்தருவாய் தேசு (98) (தேசு – ஒளி)

தேசு தருவதும்நீ தேவசே னாபதியே
மாசு களைவதும்நீ மால்மருகா – தூசுநான்
ஆசுகவி ஆக்கி அழகுசெய் அற்புதமே 
பேசுவேன் உன்னருளே பெற்று (99)

பெற்றுன்னை பேறன்றோ பெற்றான் பரசிவனும்
முற்றுன்னை கற்றதெவர் மூவுலகில் – பற்றுவேன்
வற்றியுளம் வாடினும் வாழவுன் பாதமலர்
அற்றிடவென் ஆசை அறு (100)

படிக்கப் பயன்:

கந்தனந் தாதியைக் கற்றோது வார்தமக்கு
செந்தமிழ் நாவினில் சேருமே – சிந்தையில்
தந்திமுகன் தம்பியே தங்கி யருள்செய்வான்
வந்துறும் வீழ்விலா வாழ்வு

             

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Poems (கவிதைகள்). Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s