11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா ( पञ्चतन्मात्रसायका ) ( பொறியைந்தும் நுகர்கின்ற ஐந்து இந்திரியங்களாம் சுவைத்தல், காணுதல், தொட்டுணர்தல், கேட்டல், முகர்தல் என்பவற்றை அம்புகளாக் கொண்டவள்)
சென்ற நாமத்தில் கண்டது போல கரும்பு வில் மனத்தையும், அதனால் இச்சா சக்தியையும் குறிப்பதென்றால், இந்த நாமத்தில் கூறப்பட்டிருக்கும் இந்திரியங்களான, ஐம்பொறிகளின் உருவகமாகப் அன்னையில் கையிலிருக்கும் பஞ்சபாணங்களும் கிரியாசக்தியைக் குறிப்பன. வில்லிருந்தாலே அம்பெய்ய முடியும்; மனத்தாலேதான் பொறிவழிப் புலன்களை உணரமுடியும். மனது ஒடுங்கியிருந்தால், ஐம்புலன்களும் ஒடுங்கிவிடுமன்றோ? மனத்தின் வழியே புலனடக்கம். அப்புலன்களை அம்மை தன் வலது மேற்கையில் பஞ்ச மலர்ப்பாணங்களாக ஏந்தியுள்ளாள்.
புலனைந்தும் அம்புகளாய் புட்பமைந்தில் கொண்டு
வலந்தரு வாளன்னை வாழ்வில் – உலகுயிர்கட்கு
இச்சைகள் யாவும் இலகுவாக்கி இட்சுவில்லால்
மெச்சிடத் தந்திடுவாள் மிக்கு