59. மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா ( महा पद्माटवी संस्था – பெரிய தாமரைப் பூக்களையுடைய காட்டில் வசிப்பவள் )
மஹாபத்மாடவீ என்பது மேருவில் இருப்பதாக லலிதா ஸ்தவரத்னத்தில் சொல்லப்பட்டுள்ளது. அடவீ என்ற சொல் தமிழிலும், ஸம்ஸ்க்ருதத்திலும் ஒரே பொருளில் (காடு) என்றே இருப்பது கவனிக்கத்தக்கது. மூலாதாரம் முதல் ஸஹஸ்ராகாரம் வரை உள்ள சக்கரங்கள் எல்லாமே தாமரைச் சக்கரங்களாம்; ஸஹஸ்ராகாரம் ஆயிரம் தள பத்மத்தைக் கொண்டுள்ளது. எல்லாச் சக்கரங்களிலும் அம்மையிம் அம்சங்கள் உள்ளதால், மஹாபத்மம் உள்ளிட்ட தாமரைக் காடு என்று குறிப்பிடப்படுவதாகக் கொள்ளவேண்டும். மூலாதாரம் 4 இதழ் தாமரையையும், ஸ்வாதிஷ்டானம் 6 இதழ் தாமரையையும், மணிபூரகம் 10 இதழ் தாமரையையும், அநாஹதம் 12 இதழ் தாமரையையும், விஶுத்தி 16 இதழ் தாமரையையும், ஆஞ்ஞா 2 இதழ் தாமரையையும், எல்லாவற்றுக்கும் மேலே உள்ள ஸஹஸ்ராகாரம் 1000 இதழ் தாமரையையும், கொண்டுள்ளதாக யோக ஸாஸ்திரம் கூறுகிறது.
பெருங்கமலக் காட்டினில் பேரன்னை வாழ்ந்து
அருள்செய்து காக்கிறாள் அன்பாய் – இருளை
அகற்றுவாள், ஏற்றுவாள் ஆயிரமாய் பூத்த
சகசுரா கார சவி
சவி – ஒளி