121. பயாபஹா ( भयापहा – பயங்களைப் போக்குபவள் )
அன்னையை ஸ்மரணம் செய்து, அவளுடைய நாமத்தைச் சொல்பவர்களுக்கு எவ்வித பயமும் கிடையாது. அன்னையச் சரணடைந்தவர்களுக்கு ப்ரும்ஹானந்தம் உறுதி. அந்த ப்ரம்ஹானந்தத்தில் இருப்பவர்களுக்கு பயமே இருக்காது. ஸம்ஸாரமே பயங்கரமானது என்றால், அதிலிருந்து அன்னை பக்தர்களை விடுவிக்கிறாள். அன்னை நெருப்பில் தோன்றியதே, பண்டாஸுரன்மேல் தேவர்களுக்கு இருந்த பயத்தைப் போக்க, அவனை அழிப்பதற்கே. பயமே பகை; மனித முயற்சிகளுக்கு தடையாக இருப்பது; தன்னம்பிக்கையைக் குலைப்பது. தெரியாதவற்றைப் பற்றிய பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அன்னை அறிவார்ந்த சிந்தனை அளித்து, ஐயங்களையும், அவற்றால் ஏற்படும் மனக்கிலேசங்களையும் நீக்குகிறாள். உள்ளுணர்வாலும், அறியாமையாலும், அறிவதாலும் ஏற்படும் அத்துணை பயங்களையும் அன்னை போக்குவாள்.
அனைத்துப் பயங்களும் அன்னையின் நாமம்
நினைத்துத் துதிக்க நிலைக்கா – வினையத்
தனையும் விலகத்தாய் தாள்சரண் வேண்டப்
பனைபோல் பயமுமே பாழ்