129. ஶரஸ்சந்த்ர நிபானனா ( शरच्चन्द्रनिभानना – ஶரத்கால சந்திரனுக்கு ஒப்பான அழகான முகமுடைத்தாள் )
கவிகளும், இலக்கியக் கர்த்தாக்களும் அழகான பெண்களின் முகத்தை இலையுதிர்கால சந்திரனுக்கு இணையாகச் சொல்வது வழக்கம். குளிர்காலத் துவக்கத்தில் இலைகள் உதிர ஆரம்பிக்கும், உலகில் சில பகுதிகளில்; அப்போது தோன்றும் பௌர்ணமி நிலவு , மிகவும் கண்களுக்கு இரம்மியமாக இருக்கும். ஶரத்காலத்தில் தெளிவான வானமும், தூய்மையான காற்றும் இருக்கும். அதுவே அந்த பௌர்ணமி சந்திரனை மிகவும் அழகாகவும் காட்டும். அன்னையைத் துதிக்க காலத்தின் எல்லைகளே இல்லை; எப்போதும் துதிக்கத்தக்க, சொல்லப்படவேண்டிய நாமம். அவளை மனத்தில் சரத்கால சந்திரனாக எண்ணி தியானம் செய்யப்படவேண்டியவள் அன்னை என்பதே இந்த நாமம் உணர்த்துவது.
சரதநிலா போல்மிளிரும் தாயின் முகத்தை
நிரதமாய்த் காணின் நிறைவாம் – ஒரேநாள்
இரவனுக்குத் திங்களில் எல்முகம் உண்டாம்
உரவுமன்னைக் கென்றும் ஒளி
நிரதம் – எப்போதும்; இரவன் – சந்திரன்; திங்கள் – மாதத்தில்; எல் – ஒளிர்; உரவு = நித்தியமாய் உலவும்