153. நிஷ்களங்கா ( निष्कलङ्का – மாசில்லாதவள் )
களங்கம் என்றால் அழுக்கு, மாசு, குற்றம்; நிரவத்யா என்ற நாமமும் இதையொட்டியே இருப்பதாகத் தோன்றினாலும், அது அவித்தையாம் அறியாமைக் காரணம்பற்றிச் சொல்லப்பட்டது.. இந்த நாமத்தில், முன்னரே 140வது நாமத்தில் பார்க்கப்பட்ட நிஷ்களா போன்று வெளியுலகில் பார்க்கப்படும் (அதுவே உருவகம்) தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடாமல், அவளைப்பற்றிய பதிந்த மனப்பிம்பம், மனவோட்டம் என்று இவற்றிலும்கூட மாசில்லாதவள் என்று கொள்ளவேண்டும். ஏனென்றால் அவள் அத்தகைய மனப் பிம்பங்களையும், மதிப்பீடுகளையும், உருவகங்களையும் கடந்த முற்றாய, எப்போதும் இருக்கிற ஆன்ம ஒளி. மாசில்லாக் கதிரொளி
மறுவிலா மாண்பும் மனமும் மகத்தும்
உறுமா உருவே உமையாள் – கறுப்பை
மறுத்திடு தூய்மை வனைந்துத் துலங்கு
நறுமையே அன்னை நலம்
மறு – களங்கம்; மகத்து – பெருமை; நறுமை- நன்மை; நலம் – அழகு
பிற்சேர்க்கை:
என் இனிய நண்பர் ஶங்கர் ஐயர் முகநூலில் இந்த நாமத்துக்காக கீழ் கண்ட பின்னூட்டம் எழுதியதால், அதற்காக மாற்று வெண்பாவும் செய்யப்பட்டது..
“In my view, களங்கம் may be seen as having three sources: there is congenital களங்கம் which is part of one’s very nature. There is களங்கம் resulting from one’s (in)actions, and there is களங்கம் resulting from the actions of others.
The Divine Mother is free of களங்கம் from all three sources.”
மேற்காணும் கருத்தையொட்டி…
இயல்பில் களங்கமே இல்லாளாம் அன்னை
செயல்களிலு மில்லாள் சிறிதும் – மயலார்
அயலார் வினைவழியும் அஃதிலா மாசில்
உயர்நிச் களங்கா உமை