195. தோஷவர்ஜிதா ( दोषवर्जिता – குற்றம், குறை, பாவமென்னும் தோஷங்கள் அற்றவள் )
தோஷம் என்பது குறைகளும், குற்றங்களும், அவற்றால் விளையும் பாவங்களுமாம். ப்ரபஞ்சம் முழுதும் படைத்து, இயங்கவிட்டிருக்கும் பராஶக்தியின் படைப்பிலோ, ரக்ஷிப்பிலோ எந்தவொரு தோஷமும் இல்லை. ஜீவர்கள் படைப்பவற்றில், நிருவகிப்பவற்றில் வேண்டுமானால் தோஷங்கள் இருக்கலாம். ஆனால் அன்னையின் படைப்பிலே எல்லாமே அவளே நிருமாணித்த நியதிகளின் படியே ஒழுங்கிலே இலங்குகின்றன, இயங்குகின்றன. தானும் தோஷங்கள் அற்றவள், ஜீவர்களில் பக்தர்களின் குற்றங், குறைகளையும் அவளே களைய உதவி, அவர்களை முக்தி நிலைக்கு உயர்த்துவதும் அவளே. எனவேதான் அவள் தோஷவர்ஜிதா எனப்படுகிறாள்.
தன்னிலும் தான்படைத் தாளும் அனைத்திலும்
மன்னிடும் தோடமற்றாள் மாதேவி – என்றென்றும்
நன்றாய் நியதிகளில் ஞாலத்தோர் நின்றுய்யப்
பொன்செய்யன் னையே புகல்