221. மஹாவீர்யா (महावीर्या – ஆகப் பெரும் வீரியத்தை உடையவள் )
வீரியம் என்றால் தேசு, புகழ், சமர்த்தம் என்றெல்லாம் பொருள். இவை அனைத்தின் மொத்த வடிவமாக, அலகிலா வீரியமுடையவள் அன்னை! அண்டமே செயல்களால் நிறைந்தது. அத்தனைச் செயல்களும் அம்மையின் செயல்களாம். எவையெலாம் பொது நன்மைக்கு ஏதுவாகின்றனவோ, அவையெலாம் அன்னையின் சமர்த்தம், பராக்கிரம்மம் இவற்றைக் காட்டுகின்றன. பணிவின் மூலம் பரசுராமனைத் திருத்தியதும், சம்வாதத்தின் மூலம் வாலியைத் திருத்தியதும், இராவணுடைய வலிமையைப் படிப்படியாகக் குறைத்துத் திருத்தியமைக்க முயன்றதும் என்று எல்லாமே இராமபிரானின் வீரியமே. அம்மையும் ஜீவர்களைப் படிப்படியாக துன்பப்புடத்தில் இட்டு தூயவராக்குகிறாள் அன்னை. வல்லமையை, சீராகப் பயன்படுத்துதலே வீரியம் அன்னை அதையே எப்போதும் செய்துவருவதால் அவளை மஹாவீர்யா என்கிறது இந்த நாமம்.
வல்லமைச் சீர்மையை வாமியன்னை கொள்வதால்
நல்லமகா வீரியளாய் நாமமுற்றாள் – வல்லவளாம்
அன்னைச் செயல்களே அண்டத்தில் எல்கூட்டும்
நன்மையைச் செய்யுமாம் நன்கு.