234. மஹாத்ரிபுரஸுந்தரீ ( महात्रिपुरसुन्दरी – முப்புரங்களிலும் பெருமழகியாக இருப்பவள் )
மான, மாத்ரு, மேய ( அளவு, அளப்பவர், அளக்கப்படுவது ) என்னும் த்ரிபுடிகளே த்ரிபுரங்களாம் நகரங்களானதாம். இவை அனைத்துமே அன்னையின் திட்டத்தில், அலகிலா, அளவிறந்து அகண்டதாம் பரிமாணங்களைக் கொண்டனவாம்; அவற்றைப் படைத்து, காத்து, சம்ஹரித்து மீண்டும் மீண்டும் இவற்றையே செய்துகொண்டிருக்கும், அலகிலா லீலைகளை உடைய அன்னையே அனைத்துமாய் இலங்குவதால், த்ரிபுரங்களும் அவளேயாம். அவளுருவாக அமைந்துள்ள எல்லாமே அழகு மயம். ஸத்வம், ரஜஸ், தமோ என்ற முக்குணங்களையும், ஜாக்ரதா, ஸ்வப்னம், ஸுஷூப்தி ஆகிய மூன்று அவஸ்தைகளயும், ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண ஆகிய மூன்றினையும் கொண்டதாகவே அம்மை த்ரிபுரங்களை அமைத்துள்ளாள். எல்லாமாகவும், எல்லாவற்றிலும் அம்மையே அழகுடன் வீற்றிருப்பதால் அவள் மஹாத்ரிபுரஸுந்தரீ என்றறியப்படுகிறாள்.
முப்புர முற்றிலும் முன்னவள் அம்மையின்
துப்பென வேதங்கள் சொல்லிடும் – அப்பனி
டப்புறம் வீற்றுமி டற்றினில் நஞ்சினை
சிப்பமெனச் செய்ததவள் சீர்
முன்னவள் – அனைத்திற்கும் முன்னாயத் தாந்தோன்றி; அம்மை – அழகிய அன்னை; துப்பு – பெருமை; மிடறு-கழுத்து; சிப்பம் – அற்பம்