237. மஹா சதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கணஸேவிதா ( महाचतुष्षष्टिकोटियोगिनीगणसेविता – பெருமாற்றல் உடைய அறுபத்துநான்கு கோடி யோகினீக்களின் கூட்டங்கள் கூடி அவர்களால் எப்போதும் வணங்கப்படுபவள் )
அன்னையின் ஶ்ரீசக்ரத்தில் முதல் ஆவரணமாகிய த்ரைலோக்கிய சக்கரத்தில் ப்ராம்ஹீ முதலாம் எட்டு மாத்ருகா சக்திகளும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அம்சங்களாக ஒருவருக்கு எட்டென மொத்தம் அறுபத்து நான்கு அம்சங்களாக யோகினீக்கள் உண்டு. இந்த அறுபத்து நான்கு யோகினீக்களுக்கும் அவரவர அம்சங்களாய் கோடி யோகினீக்கள் உண்டெனவும், அத்தகைய பெரும் அளவிலான யோகினீக்களால் அன்னை சேவிக்கப்படுகிறாள் என்கிறது இந்த நாமம். பாஸ்கர் ராயர் உரையிலேயே மேலும் தந்த்ர ராஜம் என்கிற க்ரந்தத்தை மேற்கோளாகக்காட்டி த்ரைலோக்கிய சக்கரம்போன்றே ஒன்பது ஆவரணங்களிலும் இருப்பதால் மஹத் என்னும் சொல் அந்த ஐந்நூற்றி எழுப்பதாறு கோடிகளையும் குறிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது இவ்வளவு யோகினீ கணக்கூட்டங்களால் அன்னை சேவிக்கப்படுகிறாளாம். சில உரைகளில் சதுஷ்ஷஷ்டிகோடி அறுநூற்றுநாற்பது கோடியென்றும் சொல்லப்படுகிறது.
எட்டெட்டுக் கோடி இறைமகளிர் கூட்டங்கள்
நிட்டையில் சேவிக்கும் நிர்மலை – மட்டிலாள்
இட்டதெய்வ மாய்வணங்கி ஏத்திடப் பத்தர்க்கு
முட்டாகி நின்ற முதல்
இறைமகளிர் – யோகினியர்; மட்டிலாள் – எல்லையிலாள்; முட்டு – பற்றுக்கோடு