282 ஸஹஸ்ர ஶீர்ஷவதனா ( सहस्रशीर्षवदना – கணக்கில்லா தலைகள், முகங்களை உடையவள் )
ஸஹஸ்ரம் என்பது ஆயிரம் என்ற பொருள் கொண்டிருந்தாலும், இந்நாமத்தில் அதைக் கணக்கிலி என்றே கொள்ளவேண்டும். இதற்கான சித்பவானந்தரின் உரை மேலும் தெளிவாகச் சொல்கிறது. அண்டத்தில் உள்ள அனந்தகோடி ஜீவன்களும் தலை, முகம் இவற்றைக் கொண்டவையே. அவை அன்னையின் புறத் தோற்றங்களே. அன்னைக்குப் புறம்பானவை அல்ல. நன்மையும் கேடும் ப்ரக்ருதியிலிருந்தே வந்தவை. நன்மை கேட்டினை வெல்லவேண்டும் என்பது இயற்கை. இராமன், இராவணன் என்ற இருவருமே அன்னையின் புறத்தோற்றங்களே! ஆயினும் இராவணனை வதைப்பதை இராமன் விலக்கவில்லை. பரஞானம் கிட்டும்வரையில் தீமைகளோடானப் போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். அனைத்தும் அன்னையினிடமிருந்து வந்தவை என்றறிந்தால், அப்போராட்டத்திலும் ஒழுங்கும், நேர்மையும் இருக்கும்.
அண்டத் தனைத்துயிரும் அன்னையே நண்ணிய
வண்ணம் அவள்சிர மாம்முகமாம் – எண்ணரும்
கண்ணினள் எவ்விடத்தும் காணும் இயற்கையாம்
புண்ணியமாம் அன்னையைப் போற்று