328. கலாலாபா ( कलालापा – கலைகளையே பேசும் மொழியாய்க் கொண்டவள் )
கிள்ளை மொழியே கலம் எனப்படும். அது பிறர்க்குப் புரியாத ஒன்றானாலும், ஒரு தாய்க்கு எளிதில் புரியக்கூடியது, மகிழ்வைத் தருவது. அடியார்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய இன் மொழியை உடையவள் அன்னை. லாலாபம் என்பது பேசும்போது குழந்தைகள் வாயிலே ஒழுகும் சொள்ளு நீராகும். அது அறியாமல் பேசும் குழந்தைகளின் பேதைப்பருவ வெள்ளையுள்ளத்தையே காட்டும்; ப்ரும்ஹ நிலையைக் கூட்டும். அன்னையின் பேச்சினிலே அன்பர்கள் ப்ருமஹத்தை நேரிடை அனுபவமாக உணரவே அன்னை அவ்வாறு “லாலாபம்” ஒழுகும் “கலமாய்” மொழிகிறாளாம். அதைச் சொல்லுவதே இந்த நாமம்.
சொள்ளொழுகும் சொல்லழகில் சொக்கவைக்கும் அன்னையின்வாய்
கிள்ளைமொழி கள்ளினிமை கேட்பதற்கு – கள்ளமில்லா
பிள்ளைமொழி காட்டுமவள் பேதையுள்ளம் அன்பரெல்லாம்
தெள்குதற்கு ஞானமுற்றித் தேர்ந்து.
தெள்குதல் – தெளிந்து