340. விலாஸினி ( विलासिनी – ஒன்றைப் பலவாய்க் காட்டும் விளையாட்டினள் )
மாயை ஒன்றை வேறொன்றாகத் திரித்துக் (விக்ஷேபம்) காட்டும்; ஒன்றின் உண்மை நிலையைக் காட்டாதொளிக்கும். நிறமற்றதை நிறமானதாக, ஒரு நிறத்தை மற்றொன்றாக, மொத்தத்தில் பிரும்ம நிலையினை அவ்வாறற்றதாகக் காட்டும். விலாஸம் என்றால் கேளிக்கை, விளையாட்டு என்று பொருள். அலகிலா விளையாட்டினள் ஆதலால் அதுவும் பொருத்தமே. வகாரம் பகாரமாகத் திரிபடையக் கூடியது. விலம் என்பது பிலம் என்று ஆகும் (வங்கதேசத்தில் இது நடைமுறையில் உள்ளதே) . காஞ்சியில் உள்ள பிலாகாஶத்திலிருந்து அன்னை வெளி வந்தாள். அதனால் அவளை பிலாஸினி என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.
ஒன்றைப் பிறிதின் உருவாய் ஒளிகாட்டும்
குன்றாதக் கேளியைக் கூட்டுவள் – அன்னை
பிலத்தின் வழியே பிறந்துவந்தக் காஞ்சிப்
பிலாஸினி யாம்பெரும் பேறு
கேளி-விளையாட்டு; பிலம் – பாதாளக் குகை;