344. க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா ( क्षयवृद्धिविनिर्मुक्ता – குறைவதும்/தேய்வது, பெருகுவதும்/வளர்வது இல்லாதவள் )
அன்னையிடமிருந்தே க்ஷேத்திரம், க்ஷேத்திரஞ்சன் என்றவை தோன்றினாலும், அவற்றுக்குத் தேய்தலும், வளர்தலும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. இவை அன்னையின் அழிவில்லாத் தன்மைக்கு மாறானவை அல்ல. ஏற்கனவே பார்த்த விலாஸினி என்ற நாமத்தின்படி, இவையும் அவளின் அலகிலா விளையாட்டுகள். அன்னை முழுமையானவள்; ஒன்றைச் சேர்வதாலோ, அல்லது அவளே விளைத்து வினையாக்கி நடத்தும் கர்மாக்களினால் ஏற்படும் பாவங்களின் பாதிப்புகள் இல்லாதவள். பரப்பென்னும் அலகிற்கு அப்பாற்பட்டவளாகையால் அவளிடம் வளர்ச்சி, தேய்வென இரண்டையும் காணமுடியாது.
தேய்ந்து வளரும் திரிபில்லா தாள்தானே
வேய்ந்த ககன விரிவினிலே – தாய்தன்னில்
மீளப் பிறக்கும் வினைகளின் பாவமிலாள்
மாளலுமற் றாளதனால் மற்று