366. பரா ( परा – பரா என்னும் ஒலி வடிவமாக இருப்பவள் )
ஆதி வஸ்துவை பரா என்றும் பராஶக்தியென்றும் கூறுவது தெய்வீக இலக்கிய மரபு. அவளையே நாதம்ப்ரம்ஹமயீ என்றும் கூறுவதுண்டு. இந்த பரா ஓலி மூலமாக இருந்து, இதிலிருந்து பஶ்யந்தி, மத்யமா, வைகரீ என்று பரிணாமமடைந்து, நம் காதுகளில் விழும் ஒலியாகிறது. உலகத் தோற்றத்தை முறைப்படி சொல்லவரும் தைத்ரீய உபநிஷத்து பரம்பொருளிலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து நீரும், நீரிலிருந்து ப்ருதிவியும் தோன்றியதாகக் கூறுகிறது. (தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாச: ஸம்பூத: ஆகாஶாத் வாயு:, வாயோக்னி: அக்நேராப:, அத்ப்ய: ப்ருதிவீ) இதற்கான பாஸ்கரராயர் உரையை ஒட்டிச் செய்யப்பட்ட ராதாக்ருஷ்ண ஸாஸ்திரிகளின் உரை விளக்கமும், கணேசய்யர் விளக்கங்களும் விரிவானவை. அப்புத்தங்களிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியவை.
ஆதியொலி யாகிநிற்கும் அன்னைபரா சத்தியே
நாதமய மானபொருள் நாரணியாம் – ஓதுநான்கு
வேதங்கள் தோற்றுவித்த வித்தாய வித்தகியின்
பாதமணி ஓசை பரா