381. ரஹோயாகக் க்ரமாராத்யா ( रहोयागक्रमाराध्या – இரகசிய யாக முறையால் வழிபடத்தக்கவள் )
தேவி வழிபாட்டில், அவளை ஆவாஹனம் செய்வதற்கு முன் ஒருவர் தன்னுடைய குற்றங்களைக் களையவேண்டும். சொல், செயல், அவயங்கள் இவற்றால் நினைத்தவற்றை, செய்தவற்றை, அவற்றால் விளைந்தவற்றை எல்லாம் ப்ரம்ஹமாகிற அன்னையிடம் அர்ப்பணித்து, குற்றமும், பேதமுமில்லா சிதக்னியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு, கட்டுக்கள் அனைத்தையும் எரித்து, தூயதாய் செய்யப்பட்டத் தங்கத்தைப்போல் ஆத்மா ஒளிரவேண்டும். அப்போது அது பரத்தோடு ஐக்கியமாகிறது. இதுவே, மற்றவர் அறியாத வேள்வியான ரஹோயாகமாம். மக்கள் நடுவே இருந்தும், ஆத்மாவைத் தனித்து உணர்வதால் ஒருவன் தனிமையில் இரகசியமாக இருக்கிறான். யாருமில்லாதிருந்தும், புறச்சூழ்நிலைகளால், அகம் பாதிக்கப்பட்டால், தனிமையே இல்லை. தனிமையில் நடக்கும் இந்த யாகத்தினால் அன்னை வழிபடப்படுகிறாள் அன்னை என்பதைக் குறிப்பதே இந்த நாமம்.
ஆத்துமம் தூய்மையுறும் ஆகமறை வேள்வியில்
பூத்துவன்னைப் பூசையுறு பூரியளாம்– ஆத்தாளை
ஏத்துதற்கு யாருமில்லா ஏகாந்தத் தேயாற்றும்
ஆத்தும சோதனையே ஆறு
ஆகம் – மனம்; பூரியள் – மிகுந்தவள், நிறைந்தவள்;