402. வித்யாவித்யா ஸ்வரூபிணீ ( विद्याऽविद्यास्वरूपिणी – வித்தியா, அவித்தை என்னும் இரண்டாகவும் இருப்பவள் )
ஆத்ம ஞானமே வித்யை. அதற்கு ஏதுவானவற்றை அறிய உதவுகின்றவை அவித்யை எனப்படும். அவித்யை என்றால் அஞ்ஞானம் என்று பொருள் கொள்ளக்கூடாது. அபர வித்யைகளாம், இகத்தில் நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் நம்மில் ஆத்ம ஸாதனைக்கு, ஞானத்திற்கு வழிகாட்டுவன. இறையென்னும் பரம்பொருளை அறிவதற்கு ஏற்படுத்தப்பட்ட கலைகளும், உபநிடதங்களும், மற்றும் ஸமயாசார நூல்களும் அவித்யைகளாம். பரஞானத்திற்குத் தேவையான உறுதி, உளத்தூய்மை அளிக்க வித்யைக்கு உதவுவனவே அவித்யைகளாம். இன்னொரு விதமாகப் பொருள் கூறுவதுமுண்டு. வித்யை–அவித்யை இரண்டும், மெய்ஞானம், ஞானமயக்கம் என்று, ஆத்ம விடுதலையையும், பந்ததையும் முறையே தருவன. ஸாதகர்களின் ஆத்ம பக்குவத்திற்கேற்ப அன்னை இரண்டுமாக இருந்து, ஜீவர்களை முன்னேற்றுகிறாள். ப்ரம்ஹமும், ஜீவனும் வெவ்வேறென்னும் எண்ணமே அவித்யை. அந்த பேதமகன்று அத்வைத நிலைக்குக் கொண்டு செல்வதே வித்யையாம்.
அன்னையே வித்தை அவித்தையென் றானவள்
நன்றிரண்டும் நானில ஞானமே – ஒன்றறுத்து
நன்றென வித்தைமெய் ஞானத்தை பற்றினால்
ஒன்றலாம் அத்துவிதம் ஓர்ந்து