575. மாத்வீபானலஸா ( माध्वीपानालसा – மாத்வீ பானத்தினால் உள்முக நோக்கிலிருப்பவள் )
திராட்சை ரஸத்தோடு தேன் சேர்ந்த மது, மாத்வீயாகும். அதை அருந்தியவர்கள் புறச் செயல்களில் நாட்டமிழந்து செயலொடுங்குவர். அலஸா என்பதைச் சோம்பல் என்று சிலர் பொருளுரைச் செய்திருக்கின்றனர். ஆனால் செயலொடுக்கத்தையே இது குறிப்பதாகும் அன்னை இதை அருந்துவதால் புறச்செயலொடுக்கம் கொண்டு உண்முகத் தியான நோக்கிலிருக்கிறாள் என்பதே இதன் பொருள். அன்னைக்கு அளிக்கப்படும் நிவேதனமாம் இதை அருந்துவதால், புறநோக்கு ஒடுங்கி அகநோக்கு விகசித்து அதனால் தியானமும்கூடி ஆத்மானந்தம் சித்திக்கும் என்பதை அன்னையே தன் ஸாதகர்களுக்கு உணர்த்துவது இந்த நாமம்.
மாத்வீ மதுவால் மனமொடுக்கம் கொண்டன்னை
ஆத்மானந் தத்தில் அகமலர்வாள் – கேத்திரமாய்
ஞானத்தைச் சாதகர்க்கு நல்கும் வழியிதென்றிப்
பானத்தை மாந்துகிறாள் பார்
கேத்திரம்–புண்ணியத்தலம்