577. மாத்ருகா வர்ண ரூபிணி ( मातृकावर्णरूपिणी – மாத்ருகாக்ஷரங்களை தன்னுடைய வடிவமாகக் கொண்டவள் )
அன்னை ஐம்பத்தோறு அக்ஷரங்களின் தொகுப்பாக இருக்கிறாள். இவ்வக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் நிறமுண்டாம். இந்நிறங்களின் வடிவாகவும் அன்னை இருக்கிறாள்.அகாராதி வர்ணங்கள் (அ முதல் அஹ வரை) புகை நிறத்தன. க முதல் பனிரெண்டு அக்ஷரங்கள் ஸிந்தூர நிறமாம்; ட3 முதல் 10 அக்ஷரங்கள் பத்தும் வெண்மை நிறமாம். ப3 முதல் ஐந்து அக்ஷரங்கள் அருண வர்ணமாம்; ல முதல் ஸ் அவரை பொன்னிறம்; ஹ, க்ஷ என்ற இரண்டும் மின்னல் நிறம் என்றும் ஸனத்குமார ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. வேறு சில க்ரந்தங்களில் வேறு நிறங்கள் இவற்றுக்குக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வக்ஷரங்களையே ஶ்ரீசக்கரத்தின் கோணங்களாகவும், தளங்களாகவும் ஶ்ரீவித்யாமந்திரத்தால் அக்ஷரஶக்தியாக அமர்ந்துள்ள தேவியின் வடிவங்களை வணங்குவது சக்தி உபாஸானா முறைகளில் ஒன்று.
வாக்கொடு ஞானமும் வாய்க்கச்செய் அட்சரங்கள்
ஆக்கியவற் றின்வடிவும் ஆமன்னை – பூக்குவியாய்
வீக்குவாள் வெவ்வேறு விந்தைநிறச் சேர்க்கையில்
சாக்தபிந்து வில்தங்கித் தாய்
சாக்தபிந்து – ஶ்ரீசக்கர நடுவில் சக்தி பீடத்தின் மையம்; வீக்கு – நிறைதல்