580. மஹநீயா ( महनीया – எல்லோராலும் கொண்டாடத்தக்கவள் )
இந்த நாமத்துக்கான விளக்கம் மிகவும் எளிதாகச் சொல்லக்கூடியதே; ஆனால் சுவாமி சித்பவானந்தர் உரை மிகவும் அழகாக ஆராய்ந்து கூறுகிறது. பொதுவாக இறைவனைக் கொண்டாடுபவர்கள் பலர் இருந்தாலும், தூற்றுபவர்கள் சிலராவது இருக்கிறார்கள். அப்படித் தூற்றுபவர்களும் கொண்டாடும் பல விஷயங்கள் உண்டல்லவா? அப்படியென்றாலும் அவர்களும் இறைவனைப் போற்றிக் கொண்டாடுபவர்களே. ஏனென்றால் அன்னைக்குப் புறம்பாக அகிலத்தில் மட்டுமல்ல, அண்டமுழுதும்கூட ஏதுமில்லையே. இறை மறுப்பாளர்கள் போற்றும் விஷயங்களும் அன்னையே அன்றி வேறில்லை, என்பதால் அவளே எல்லோராலும் கொண்டாடத் தக்கவள்.
தன்னில் புறம்பேதும் தானில்லா தாள்யார்க்கும்
அன்புடனா ராதிக்கும் அன்னையே – நன்றெனப்
போற்றலும் தூற்றிப் புரைப்பேற்றிப் பேசுதலும்
ஏற்புடைத்தாம் ஒன்றே இவட்கு
புரைப்பு – குற்றம்