673. ப்ருஹதீ ( बृहती – பெரிய உருவினள் )
பெரியவைகளுக்கெல்லாம் பெரியவள் அன்னை. எதுவே அணுவுக்குள் அணுவாகவுள்ளதோ, அதுவே எல்லைகளுக்குமேல் விரிந்தும், பரந்தும் உள்ள பெரும்பரமாம். மனத்தை அத்தகைய அகண்டத்துக்குள் செலுத்த இயற்கையிலே உள்ள மூன்றுவிதமான பாங்குகளை ஒரு ஸாதகன் தியானிக்கவேண்டும். வானளாவ உயர்ந்த மலைகளைப் பார்த்து களிப்பதும், விரிந்து பரந்த சமுத்திரத்தைக் கண்டு களிப்பதும், இரவில் வெட்டவெளியில் சுற்றியுள்ள வான்வெளியில் மனத்தை ஊன்றுவதுமே அவையாம். இவற்றில் மனத்தை ஊன்ற ஊன்ற, பரம்பொருளின் விஸ்தீரணம் மனத்தில் நிலையாகி, அதில் நிலைப்பதும் இலகுவாகிறது. ப்ருஹதீ என்பது முப்பத்தாறு அக்ஷரங்கள் கொண்ட ஒரு சந்த அமைப்பு. ஸாம வேதத்தில் ப்ருஹத் ஸாமமென்னும் ஒரு பகுதியும் உண்டு. இவை யாவும் அன்னையின் வடிவங்களே.
பெரியவாம் யாவிலும் பேருருவாய் மிக்க
அரியளாய் அன்னை அகன்றாள் – விரிந்து
பரந்தவாம் அண்டப் பரவெளியும் பார்க்கின்
உருவில் சிறிதே உணர்