725. தக்ஷிணாமூர்த்தி ரூபிணி ( दक्षिणामूर्तिरूपिणी – தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாக இருப்பவள் )
ப்ரம்ஹா, விஷ்ணு முதலியவர்களுக்கு உபதேஶம் செய்யும் ஶிவனுடைய உருவத்திற்கு, அவர் தெற்கு திசையை நோக்கி இருப்பதால் தக்ஷிணாமூர்த்தி என்று பெயர். ஆலமரத்தின் கீழிருந்து அவர் இளைஞராய், சீடர்கள் முதிய ஞானியராம் முனிவர்களாய், கையில் சின்முத்திரையுடன், மகிழ்ச்சி நிரம்பிய முகத்தராய், பேசாமல் ஞானத்தை வழங்கும் மௌனியாய், குருபரம்பரையின் ஆதி குருவாய் இருப்பவர் தக்ஷிணாமூர்த்தி. மற்றொருவிதமாகக் கூறுவோமென்றால் அர்த்தநாரி கோலத்தில் ஶிவனும் ஶக்தியுமாக இருக்கும் வடிவங்களும் உண்டு. ஆனால் காமாக்ஷியின் ஶிவன் தேவியினுள் அடங்கிய வடிவினராக இருப்பதுபோல், தக்ஷிணாமூர்த்தி வடிவத்துள் தேவியும் உள்ளாள். ஶக்தியை வெளிப்படுத்தாதச் சலனமற்ற ஞானவடிவம் அது. பேரானந்தமிருந்தும் அதை வெளிக்காட்டாத ஶாந்தபாவத்தராய் ஶிவனிருக்கும் வடிவம்.
தன்மய மாயமர்ந்தத் தட்சிணா மூர்த்தியின்
சின்மய உருவினள் தேவியன்னை – குன்றா
இளமைக் குலவிடும் இன்பமுடன் மௌனம்
கொளுவிய ஞானக் கொழுந்து
கொளுவுதல் – தழுவுதல்