946. பஞ்சயக்ஞப்ரியா ( पञ्चयज्ञप्रिया – ஐவகை வேள்விகளில் விருப்பமுள்ளவள் )
தேவர்களுக்கான தேவ யக்ஞம், வேதங்களைப் பெற்றுத் தந்த மந்த்ர த்ருஷ்டாக்களான ரிஷிகளுக்கான ப்ரம்ஹ யக்ஞம், முன்னோர்களுக்கான பித்ரு, பஞ்ச பூதங்களுக்கான பூத யக்ஞம், மனிதகுல க்ஷேமத்துக்காகச் செய்யப்படும் மனுஷ்ய வேள்விகளே ஐவகை வேள்விகளாகும். அகந்தை நீங்கி சித்தம் தூய்மையடையவும், அனைத்தையும் ஈசனுக்கே அர்ப்பிக்கும் மன நிலையைப் பெறச் செய்யப்படுபவையே வேள்விகளாம். இதில் எனக்கு உரியதாக இருந்ததை இன்னார்க்கு உரியாதாக்கிவிட்டேன் என்னும் பாவனையே சிறப்பு. ஐவகை பூஜைகளாம் அபிகமனன், உபாதானம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் இவைகளும் பஞ்ச யக்ஞங்களாகச் சொல்லப்படுபவையே. இதையும் தவிர அக்னிஹோத்திரம் செய்பவர்கள் ஐந்து குண்டங்களில் ஹோமம் செய்து ஆஹுதி செய்வதையும் பஞ்ச யக்ஞம் என்பர். இவ்வாறு ஐந்தாக வரும் அனைத்துவிதமான வேள்விகளிலும் அன்னைக்கு விருப்புண்டு. வேதம் கூறும் ஐவகை வேள்விகளாவன: அக்னிஹோத்திரம், தர்ஶபூர்ணமாஸம், சாதுர்மாஸ்யம், பஶுபந்தம், ஸோமம்.
ஐந்தைந்தாம்வேள்விகளால்ஆற்றிஅகந்தையற
மைந்துற மாற்றுவள் மாய்த்துமயல் – ஐந்தறுத்துச்
சித்தத்தைத் தூய்மை செயுமைந்தாம் வேள்விகளில்
வித்தகியாம் தாய்க்குண்டு வேட்பு
மைந்து–வலிமை; மயல்–மயக்கம்; ஆற்றி–தணித்து; வேட்பு–விருப்பு