ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 901

901. நாதரூபிணீ ( नादरूपिणीநாத வடிவாக இருப்பவள் )

ஓங்காரத்தின் முடிபாகமானம்”-ன் நீட்சியாம் கார்வையே நாத ஒலியாக உணரப்படுவது. அந்த ப்ரணவ நாதமே ப்ரபஞ்சமாக உருவெடுத்தது. யோகிகள் உள்ளத்தே உணரக்கூடிய ஒலிவடிவம்; அவர்களுக்கு அளவில்லா ஆனந்த அனுபவத்தைத் தருவது. அதன் வடிவாக அன்னை இருக்கிறாள்.

பிரபஞ்ச வானில் பிறந்திடு நாதம்

பிரணவ மாகப் பிறங்கும்கருதும்

அருளின் உருவாய் அதனுள் அமர்ந்து

வருவதே தாயின் வடிவு

பிறங்கும்ஒலிக்கும்

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000

1000. லலிதாம்பிகாம் ஓம்: ( ललिताम्बिकाஅழகிய அன்னையே ஓம்! )

ஆயிரம் நாமங்களில் இறுதியானது. சிறப்புள்ள அன்னை என்று தொடங்கிய நாம வரிசை, அழகிய தாய் என்று நிறைவுறுகிறது. விளையாட்டாகவே ஜகத்தையும், ஜீவகோடிகளையும் படைத்ததோடு, அழகியலோடு அவற்றையெல்லாம் செய்திருக்கிறாள். அவளுடைய ஸாந்நித்தியமே அவள் படைப்பத்தனையிலும் காணப்படுகின்றன, இந்த எளிய முயற்சி உட்பட. பிரணவ ஒலியோடு நிறைவுறும் இந்த நாமாயிர வெண்பா மாலையை உட்பட! அழகியலுக்கே அன்னையாம் லலிதையை வணங்கித் தொழுவோம், ஓம் எனச் சொல்லி!

அழகிய தாயாம் அருளின் வடிவாம்

எழிலாம் லலிதை இறைவிகுழகாம்

பழகுத் தமிழினில் பாவாயி ரத்தால்

தொழவுள் உறைவாள் சுடர்

இன்றோடு இந்த நாம வெண்பா மாலை நிறைவுறுகிறது. என்னம்மையாக, என்னைப் பிறப்பித்து, என்னைக் கைப்பிடித்து நடத்தி, என்னும் அமர்ந்ததும் அவள் தானே. அவளுக்குச் சூடுவது அவளே எனக்குள் ஒளிர்ந்து இட்ட கட்டளையாகத்தான் எண்ணுகிறேன். இப்பணியைச் சரிவரச் செய்தேனா இல்லையா என்றறியேன். ஆனால் குழந்தையின் மழலையும் அன்னைக்கு மட்டற்ற மகிழ்ச்சிதானே!. அன்னையின் அருளாலே அவளை ஆயுள் உள்ளளவும் பாட அவளின் அருளை வேண்டுவதன்றி வேறேதும் வேண்டேன்.

ஓம்

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999

999. ஶிவ ஶக்த்யைக்ய ரூபிணி ( शिवशक्तैक्यरूपिणीஶிவனும், ஶக்தியும் ஒன்றான வடிவினள் )

அன்னையை ஶிவ வடிவமென்றோ, ஶக்தி வடிவமென்றோ எண்ணாமல், ஒன்றான வடிவாகவே எண்ணவேண்டும். இதற்கு பல உவமைகளைக் கூறலாம். எள்ளில் உள்ள எண்ணெய் போலவும்,  சந்திரனில் உள்ள குளிர் கிரணங்கள் போலவும், ஸுர்யனும், வெப்பமும் போலவும், சொல்லும்பொருளும் போலவும் என்று பலவிதமாக இதை விளக்கலாம். ஶ்ரீ சக்கரத்தில் ஐந்து ஶக்தி சக்கரங்களும், நான்கு ஶிவ சக்கரங்களும் இருந்தாலும் ஶ்ரீசக்கரமாகப் பார்க்கும்போது அந்த பேதம் மறைந்து ஶிவஶக்தி ஐக்கியமாக ஶ்ரீசக்கரம் மட்டுமே புலப்படுகிறது. ஶிவஶக்தி ஐக்கியத்தைக் காட்டும் ஹம்ஸ மந்திரத்தின் வடிவானவளாக உள்ளவள். இன்னும் பலவிதமாக இந்த நாமத்தை விளக்கலாம்.

அத்துவித மாயன்னை ஐயனொடு ஒன்றியவள்

எத்தனைத் தோற்றம் எடுக்கிறாள்? – புத்திக்குள்

சித்திக்கும் ஞானவொளிச் சீராய் சிவனுக்குள்

சத்தியாய் சேர்ந்திருக்கும் தாய்!

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998

998. ஶ்ரீ ஶிவா ( श्रीशिवाதிருமிக்க ஶிவை )

அன்னை ஶிவனுடைய பத்தினியாயிருப்பதோடு, அவருடன் அபேதமாக இருப்பதால், ஶிவனும், ஶிவையும் ஒருவரே. அவளே திருமிக்க மங்கள வடிவினளாக இருக்கிறாள்..

சிவனோ(டு) அபேதமாய் தேவித் திகழ்வாள்

சிவையென ஒன்றித் திருவாய்பவத்தின்

அவத்தை அறுத்தே அளியால் அணைக்கும்

நவநிதியாம் மங்களமே ஞாய்

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997

997. ஶ்ரீமத் த்ரிபுர ஸுந்தரீ ( श्रीमत्त्रिपुरसुन्दरीசிறந்த திரிபுராந்தகரான பரமஶிவனின் அழகிய பத்தினியாக இருப்பவள் )

திரிபுரராம் பரம ஶிவன், ப்ரும்ஹா, விஷ்ணு, ருத்திரன் என்ற மூவரின் உடல்களாம் திரிபுரங்களைக் கொண்டவர். அவருடைய பத்தினியாகவும், திருவோடு கூடியவளாகவும் இருப்பதால் அன்னைக்கு ஶ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ என்று பெயர். தவிரவும் ஸ்தூலம், ஸுக்ஷ்மம், காரணம் என்னும் மூன்று புரங்களுக்குள்ளும் உள்ளுறைந்து, சிறப்பும், அழகும் மிக்கதாகச் செய்வதாலும் அன்னை திரிபுரஸுந்தரீ

முப்புரங்கள் செற்றவராம் முக்கண்ணர் வாமத்தில்

எப்போதும் சேர்ந்திருப்பாள் ஏமமன்னைதப்பாமல்

செப்பியவள் நாமத்தைச் சிந்திக்கச்  செல்வமுறும்

அப்பப்பா அள்ளும் அகம்.

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996

996. ஶ்ரீசக்ரராஜ நிலயா ( श्रीचक्रराजनिलयाஶ்ரீ சக்கரத்தைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவள் )

சக்கரங்களுக்குள் மிகவும் உயர்ந்த ஶ்ரீசக்கரம் ஒன்பது மதில்களைக் கொண்டது. அதனைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள் அன்னை. ஶிவஶக்தி ஐக்கிய ஸ்தானமாக ஶ்ரீசக்கரத்தைச் சொல்லுவது வழக்கம். இங்கு ஶ்ரீசக்கரராஜம் என்னும் தேருக்குள் இருப்பவள்.

திருவாழி ராசமெனும் தேருக்குள் வீற்ற

உருவே உமையென்(று) உணர்வீர்திருவின்

அருளாய் அகிலம் அனைத்தும் அதனுள்

இருக்கப் புரிவாள் இறை

திருவாழிராசம்ஶ்ரீசக்ரராஜம்

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 995

995. ஸர்வா நுல்லங்க்ய ஶாஸனா ( सर्वानुल्लङ्घ्यशासनाயாரும் மீறக்கூடாதக் கட்டளைகள் கொண்டவள் )

அன்னையின் கட்டளைகளை ப்ரும்ஹா உள்ளிட்ட மூவரும் நிறைவேற்றுகிறார்கள். அவர்களாளும் கூட அன்னையின் கட்டளைகளை மீற முடியாது. அவளுடைய புருவ நெரிப்பாலேயே இடும் கட்டளைகளை ப்ரும்ஹா முதலியவர்கள் ஜகத்தில் ஶ்ருஷ்டி முதலான பஞ்ச க்ருத்யங்களையும் செய்கிறார்கள் என்று ஶங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரியில் கூறுகிறார்.

அன்னையின் ஆணைகள் அண்டத்தில் யாராலும்

என்றுமே மீறவொண்ணா எல்லைகள்நன்கவற்றை

நின்றொழுகும் திண்மை நெறிகளாய் முத்தேவர்

அன்றாடம் ஆற்றுவரே ஆன்று

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 994

994. ஆபால கோப விதிதா ( आबालगोपविदिताசிறுவர்களாலும், இடையர்களாலும்கூட அறியப்படுகிறவள் )

அக்ஞானமுடையவர்களுக்குக் காட்டாக குழந்தைகளையும், இடையர்களையும் சொல்வது வழக்கம்.  ஏனெனில் குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சியிராது. இடையர்களோ அவர்கள் தொழிலிலேயே மூழ்கி தெய்வத்தை நினைக்கவும் இயலாதவர்கள். அவர்கள் கூட அறியக்கூடிய வடிவில் அன்னையைத் தெய்வமாக அறிவார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் ப்ரும்ஹா முதலிய மும்மூர்த்திகளும் ஸதாஶிவனுக்குப் பாலர்கள். அவர்கள் உலகைக் காக்கும் பணியிலுள்ளதால் கோபர்கள். அவர்களால் அன்னை அறியப்பட்டவள். பொதுவாக வழக்கில் அனைத்து மக்களையும் குறிப்பதற்குஆபால கோபாலஎன்பது வழக்கம். அவள் அனைத்து மக்களாலும் அறியப்பட்டவள்.

இளஞ்சிறார் கோபர்கள் என்றெவர்க்கு மன்னை

விளங்குகின்ற தெய்வமெனும் வீரைஅளவில்

அளியில் அகிலமெல்லாம் ஆண்டருள் வாளை

உளத்துணரா தார்யார் உளர்?

வீரைதாய்; அளவில்அளவில்லாத; அளிகருணை;

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 993

993. அக்ஞான த்வாந்த தீபிகா ( अज्ञानध्वान्तदीपिकाஅறியாமையாம் இருளைப்போக்கும் சிறு விளக்கினைப் போன்றவள் )

அன்னை எவ்வித காரணமுமில்லாத கருணையாதலால், அவள் ஜீவர்களிடம் உள்ள அறியாமையாக இருளை அகற்றி அவர்களுக்கு தேவையான அளவுக்கு ஒளியைத் தந்து நலத்தை நல்குகிறாள். அன்னையோ பேரறிவு. அந்தகாரத்தில் இருந்தவர்க்குப் பேரொளியைக் காட்டினால், கண்கள் காணும் திறனை இழக்குமென்பதால், மெல்ல ஒளியைக் கூட்டும் சிறு தீபமாக அன்னை ஒளிர்கிறாள்.

அறியாமை நீக்கி அறிவொளியைக் கூட்டும்

சிறுவிளக்கே போன்றவள் தேவி  செறிவாய்

நெறியில் நிலைக்க நிமலை அருள்வாள்

குறித்தவளை கும்பிடுவார்க் கு

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 992

992. அவ்யாஜ கருணா மூர்த்தி: ( अव्याजकरुणामूर्तिःஎதிர்பார்ப்புகளற்ற கருணை வடிவினள் )

அன்னையின் கருணை எதிர்பார்ப்புகள் இல்லாத ஒன்று. இதைச் செய்தால் இது பலனாகக் கிடைக்கும் என்று ஒரு காரணம்பற்றி விளையும் கருணையல்ல அது காரணமின்றி பெருகும்  கருணையது; அவளே கருணை வடிவானவள் தானே. ஸௌந்தர்யலஹரியில் ஶங்கரர், “செந்நிறக் கருணை ஒருத்தி விளங்குகிறாள்என்னும் பொருள் வரும்படிஜயதி கருணா காசித் அருணா, அருணம் கருணாதரங்கிதாக்ஷீம்என்கிறார்.

காரணம் இல்லாக் கருணைப் பெருக்கென

ஆரணி அன்னை அருள்தருவாள்நீரதியாம்

நாரணியாள் சங்கரன் நாயகியே சீரளிக்கும்

காரதுபோல் பெய்வாள் கனிந்து

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 991

991. ஷடத்வாதீதரூபிணி ( षडध्वातीतरूपिणीஆறு வழிகளைக் கடந்த வடிவினள் )

அம்பிகையை உபாஸிக்கும் மார்க்கங்கள் ( அத்வாக்கள் ) ஆறாகும். அவை வர்ண, பத, மந்த்ர, கலா, தத்வ, புவன என்பனவாம். ‘முதல்க்ஷவரையுள்ள அக்ஷரங்களின் ஶக்தியை விளக்குவது வர்ணத்வா;  அக்ஷரச் சேர்கையில் பொருளுள்ள பதங்கள் அமைய, அவற்றின் ஶக்தியை விளக்குவது பதாத்வா; அக்ஷரங்கள், பதங்களைக் கொண்டு தனியாகவோ, கூட்டாகவோ ஶக்திகொண்டு விளங்குவது மந்த்ரத்வா;  பஞ்சபூத கலைகளை விளக்குவது கலாத்வா;  ஶிவன் முதல் பூமி ஈறாம் முப்பத்தாறாம் தத்துவங்களுக்கான விளக்கம் தத்வாத்வா; ஐந்து புவனங்களுக்கான தத்துவங்களை விளக்குமாறு புவனத்வா. இவ்வாறு வழிகளை விளக்குவதும் அன்னைதான். இவற்றுக்குள் அடங்காத வடிவானவளும் அன்னையேதான்.

ஆறென ஆற்றினை அன்னையே தந்தாலும்

ஆறும் கடந்தன்னை ஆன்றவளாம்பேறாக

ஆறும் அறிந்தாலும் அன்னையெனும் சீரறிய

ஆறுமவ் வன்னையே ஆம்!

ஆறுவழி, எண்ணிக்கை

Posted in Lalitha Sahasranamam | Leave a comment