குறளின் குரல் – 820

18th Jul 2014

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
(குறள் 814: தீநட்பு அதிகாரம்)

அமர் அகத்து – போர்களத்தின் கண்
ஆற்று அறுக்கும் – தாமும் வீழ்ந்து, அல்லது மேலமர்ந்த வீரனைத் தள்ளிவிடும் (நம்பகத்தன்மையை அறுக்கும்)
கல்லா – கல்வி அறிவற்ற
மா அன்னார் – பரியைப் போன்றவர்
தமரின் – தம்முடைய நண்பராக இருத்தலைவிட
தனிமை தலை – தனியாக நண்பரே இல்லாது இருத்தலே முதன்மையானது.

சில நேரங்களில் கல்வியறிவற்ற பரியானது நம்பிக்கையை அறுக்கும் விதமாக போர்களத்திலே தாமும் வீழ்ந்து தம்மேல் அமர்ந்த வீரனையும் தள்ளி விட்டு விடுமாம்; அது போன்றவர்களைத் தமரென்று நண்பராகக் கொள்ளுதலைவிட தனிமையே, அதாவது நண்பர்கள் அற்று இருப்பதே மேல். இது இக்குறள் சொல்லும் பொருள்.

நட்பாராய்தல் அதிகாரத்தில் இக்குறளையொட்டியே “உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” என்று சொல்லப் பட்டதை நினைவுகூற வேண்டும்.

பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு, போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போன்றவர்கள், வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தல் இலராய், அவர் உயிரைப் பகைவரால் போகுதற்கு வழி செய்து, பின்னர் இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள்; இவர்கள் தம் ஊரில் நடந்து முடிந்த விழாவினைக் காட்டுவதாக தம்மகனைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர், என்கிறது பழமொழிப்பாடலொன்று. இப்பாடல் போர் தொடங்கியதும் தீர்த்த யாத்திரைக்கு, தாம் சார்ந்த பக்கத்தையும், தம்மோடு நட்புறவில் இருந்தவரையும் தேவையான நேரத்தில் நீங்கிய விதுரரையும், பலராமரையும் சுட்டிக்காட்டுகிறது. இனி அப்பாடல்:

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார் – போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே
கழிவிழாத் தோளேற்று வார்.

மற்றொரு பழமொழிப்பாடலும் இக்கருத்தையொட்டியதே:

எய்ப்புழி வைப்பாம்எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு.

பசுமையான பொன் வளையலை உடையாய், தளர்வு வந்த இடத்து வைத்திருக்கும் பெருநிதியைக் கொண்டு, உதவி செய்வர் எனக் கருதி, நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர், நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து, ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி, அச்சம் காரணமாக மறுப்பாராயின், அச் செய்கை, ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா!

இக்குறள் கூறும் கருத்து நம்ப வைத்து நட்டாற்றில் விடுவோரைவிட நட்பென்றில்லா தனிமையே நன்றென்பதாம்.

Transliteration:

Amaragaththu ARRaRukkum kallAmA annAr
Tamarin tanimaiyE talai

Amar agaththu – In th war field
ARR(u) aRukkum – falling and failing the warrior sitting on it
kallA – uneducated
mA annAr – horse like
Tamarin – to have theme as our own as friends
tanimaiyE talai – being alone is predominant and better

An uneducated, senseless horse may fall and fail the warrior sitting on it during the crucial time in the war field. It is better to be alone than to have friends that are like that failing horse.

We have seen a verse that said “koLLarka ARRu aRuppAr naTpu”, (verse 798) just two chapters back in researching friends.

There are couple of poems from pazhamozhi nAnURu” which hint the underlying thought. The first poem says, like how Balarama left the friendly king DhuryOdana during the crucial time of war, they are friend that abandon during crucial times; it is better to be alone than to have such friends. They are like people that let you climb a roof and pull the ladder.

“It is better to be alone than to have afriendship, like a horse
that pushes during cruicial time in the warfield – it is farce.

இன்றெனது குறள்(கள்):

போர்களத்தில் தள்ளிவிடும் கல்லா பரியன்னார்
நீர்த்தநட்பின் அற்றிருத்தல் நன்று

pOrkaLaththil thaLLiviDum kallA pariyannAr
nIrththanaTpin aRRiruththal nanRu

நட்பென்று நட்டாற்றில் விட்டுநீங்கிச் செல்வோரின்
நட்பின் தனிமையே நன்று

naTpenRu naTTARRil viTTunIngich chelvOrin
naTpin tanimaiyE nanRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment